அதிகார மோகம் காரணமாக, மக்களின் நாடித் துடிப்பை
புரிந்து கொள்ளாமல் அரசியல் செய்த புத்தளம் மாவட்ட அரசியல்வாதிகளுக்கு இம்முறை மாகாண
சபைத் தேர்தல் தகுந்த பாடத்தை புகட்டியிருக்கிறது. ஒருவர் மற்றவரை விட அதிகாரத்தில்
விஞ்சியிருக்க வேண்டும் என்ற மமதை அவர்களுக்குள் இருந்ததே தவிர, இவர்களில் பலர் பொது மக்களின் எண்ணங்கள், எதிர்பார்ப்புக்கள் மற்றும் அபிலாஷைகளை சரியாக எடுத்துக்
காட்டுவதற்கோ, அதற்குரிய சரியான தீர்வைப்
பெற்றுக் கொடுப்பதற்கோ தவறிவிட்டனர்.
மக்களின் பிரதிநிதிகளாக செல்லும் அவர்கள், அரசாங்கத்தின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட்டார்களே
தவிர, முஸ்லிம்களின் குறை
நிறைகளை கவனிப்பதில் அசமந்தப் போக்குடனேயே இருந்து வந்துள்ளார்கள்.
ஆரம்பத்தில் முஸ்லிம் காங்கிரஸ் சார்பாக போட்டியிட்டு
மக்களின் அதீத நம்பிக்கையை வென்ற ஆப்தீன் எஹியா இம்முறைத் தேர்தலில் குதித்ததும் அந்தக்
கட்சியை கடுமையாக விமர்சித்திருந்தார். இதுவரை காலமும் புத்தளம் வாழ் முஸ்லிம்களுக்காக
2000 ஆம் ஆண்டு முதல் குரல்
கொடுத்து வந்த ஒரு கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் செயற்பட்டு வந்தது. இதில் முன்னின்று
செயற்பட்டவர்களில் கே.ஏ.பாயிஸ், நியாஸ், ஆப்தீன் எகியா, போன்ற மக்கள் பிரதிநிதிகளை நாம் குறிப்பிடலாம்.
இவர்கள்
அனைவரும் உண்மையில் முஸ்லிம்களின் நலனுக்காக காத்திரமான பங்களிப்பை வழங்கியது உண்மைதான்.
இருப்பினும், அந்த பங்களிப்பை அவர்களால்
தொடர்ந்தும் வழங்க முடியாமல் இருப்பதற்கான காரணம் என்ன? மக்களின் கருத்தாக
அவர்களின் குரல் ஒலிக்க மறுப்பது ஏன்? முஸ்லிம் காங்கிரசிற்கு அடித்தளமிடப்பட்ட புத்தளத்தில் அந்தக் கட்சியின் சார்பில் முஸ்லிம்
மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்ற முடியாமல் இருப்பது ஏன்?
ஒரு கட்சி ஸ்தாபிக்கப்படுவதன் நோக்கம் சரியாக
நிறைவேற்றப்படாத பட்சத்தில் அதன் சீர்குலைவு என்பது தவிர்க்க முடியாத ஒன்று. வடபுலத்தில்
தமிழரசுக் கட்சி நிறுவப்பட்டதன் நோக்கம் சரியாக நிறைவேற்றப்பட்டுள்ளது என்பதை தற்போது
அந்தக் கட்சிக்கு கிடைத்துள்ள சுமார் 85 சதவீத மக்கள் ஆணை நிரூபித்துள்ளது. சாதாரணமாக எமது
அரசியல் தலைமைகள் தமது பிரச்சாரத் தொணிப் பொருளாக கொண்டிருந்த அபிவிருத்திக்கும் அப்பால், மக்களின் குரலை, அவர்களின் அபிலாஷைகளை, எதிர்பார்ப்புக்களை அந்தக் கட்சி நிறைவேற்றியது என்ற
அடிப்படையில் அதற்கு மக்களின் ஆதரவு கிடைக்கப் பெற்றுள்ளது என்பதே உண்மை.
அந்த வகையில், புத்தளம் மாவட்டத்தில் முஸ்லிம்கள் விடயத்தில் பௌதீக
அபிவிருத்திக்கும் அப்பால் அந்த மக்கள் எதிர்பார்க்கும் பல விடயங்கள் காணப்பட்டன. முஸ்லிம்களின்
கல்வி முன்னேற்ற விடயத்தில், அவர்களின் சமூக பொருளாதார
முன்னேற்றத்தில், கலாசார விழுமியங்களை
பாதுகாக்கும் விடயத்தில் தற்போதுள்ள முஸ்லிம் தலைமைகள் காத்திரமான பங்களிப்பை வழங்கத்
தவறிவிட்டனர். ஒரு இலட்சத்திற்கும் மேற்பட்ட முஸ்லிம்கள் வாழும் புத்தளம் மாவட்டத்தில்
முஸ்லிம்கள் நினைத்திருந்தால் தேர்தலில் ஆளும் கட்சி சார்பில் போட்டியிட்ட தாஹிர், எஹியா, ரியாஸ் ஆகிய மூவருமே தெரிவாகியிருப்பார்கள். இது தவிர முஸ்லிம்
காங்கிரஸ் சார்பிலும் குறைந்தது இரண்டு பேரையேனும் தெரிவு செய்திருக்கலாம். ஆனால் நடந்தது
என்ன? முஸ்லிம் காங்கிரஸ்
சார்பில் மாத்திரம் ஒருவர் (நியாஸ்) தெரிவாகியுள்ளார். அதுவும் அவர் நான்காயிரத்துக்கும்
குறைவான வாக்குகளையே பெற்றுள்ளார். அப்படியானால், முஸ்லிம் காங்கிரசும் புத்தளம் வாழ் மக்களின்
அபிலாஷைகளை புரிந்து கொள்ள வில்லையா என்ற கேள்வி உங்களுக்குள் எழலாம். முஸ்லிம் காங்கிரஸ்
என்பதையும் விட அந்தக் கட்சியை பிரதிநிதித்துவப் படுத்துபவர்களிடம் ஒரு நிலையான கொள்கை
இல்லாததுதான் அதற்கு காரணம் என்று நான் சொல்கின்றேன். இந்தக் கட்சியை பிரதிநிதித்துவப்
படுத்திய எவரும் முஸ்லிம் காங்கிரஸின் கொள்கையில் உறுதியாக நின்று கடைசிவரை செயற்பட
மறுத்தவர்களாகவே உள்ளனர். வடபுலத்தில் மக்களின் கொள்கையை பாராளுமன்றத்திலும், உள்ளுராட்சி மன்றங்களிலும், உள்நாட்டிலும், சர்வதேசத்திலும், ஊடகங்ளிலும், பொது மேடைகளிலும் அவர்களின் பிரதிநிதிகள் பயமின்றி குரல் கொடுத்து
வந்ததால் தான் அவர்களை மக்கள் மீண்டும் தெரிவு செய்துள்ளார்கள் என்ற உண்மையை நாம் எவரும்
மறுப்பதற்கில்லை. இதன் அடிப்படையில் புத்தளத்தில் முஸ்லிம்கள் சார்பில் குரல் கொடுத்த
ஒரு கட்சியாக முஸ்லிம் காங்கிரஸ் இருந்த போது அதற்கு மக்களின் அமோக வரவேற்பு இருந்ததையும்
நாம் மறந்து விட முடியாது. பாராளுமன்றத்திற்கு தெரிவு செய்து அனுப்புவதற்காக புத்தளம்
மாவட்ட முஸ்லிம் மக்கள் சுமார் 30 ஆயிரம் வாக்குகளை கே.ஏ பாயிசுக்கு வழங்கியிருந்தார்கள் என்றால்
அந்த வாக்கு வங்கி ஏன் இன்று சரிய வேண்டும்? இதற்கு பொது மக்களை ஏன் நாம் குறை சொல்ல வேண்டும்?
பொதுவாக தாம் தெரிவு செய்யும் பிரதிநிதிகள்
இப்படித்தான் இருக்க வேண்டும் என்று மக்களுக்குள்ளும் பல எதிர்பார்ப்புக்கள் இருப்பதை
இந்த அரசியல் தலைமைகள் எப்போதாவது சிந்தித்துப் பார்த்ததுண்டா? அவர்களின் கருத்துக்களை
உள்வாங்கி பொது மேடைகளில் அவர்களின் குரல் ஒலித்ததுண்டா? நாம் எந்தக் கட்சியுடன்
இருக்கின்றோம் என்பதில் சிக்கல் இல்லை. ஆனால், தாம் பிரதிநிதித்துவப் படுத்தும் சமூகத்தை மறந்து
அவர்கள் செயற்படக் கூடாது. மக்களின் எதிர்கால சுபீட்சத்தில் கவனம் செலுத்த வேண்டுமேயொழிய
அவர்கள் மத்தியில் இருக்கும் பிளவை அடிப்படையாக வைத்து அரசியல் செய்ய முயற்சிக் கூடாது.
ஆனால், புத்தளத்தின் தற்போதைய
நிலையில் அரசியல் பிளவை அடிப்படையாக வைத்துத்தே தமது வாக்கு வங்கியை தக்க வைத்துக்
கொள்ள அரசியல் தலைமைகள் முயற்சிக்கின்றன. இதைத் தவிர்த்து மக்களின் அபிலாஷைகளுக்கு
முக்கியத்துவமளித்து அவர்களின் நாடித் துடிப்பை சரியாக இனங்கண்டு அதற்கு ஏற்ப தமது
அரசியல் நிகழ்ச்சி நிரலை வகுத்துக் கொள்ள வேண்டும்.
தற்போது வெளியாகியிருக்கும் தேர்தல் முடிவுகளின்
படி, ஆளும் கட்சியின் சார்பில்
போட்டியிட்டு தெரிவாவதென்பது சற்று சிரமான விடயம். இருப்பினும், அரசாங்கத்தின் சார்பிலும்
போட்டியிட்டு தெரிவாக வேண்டிய நிர்ப்பந்தம் காணப்படுகின்றது. இதற்காக புத்தளம் வாழ்
அரசியல் தலைமைகள் தமக்குரிய வாக்கு வங்கியை அதிகரித்துக் கொள்ள வேண்டும். ஆளும் கட்சியில்
இருந்து கொண்டு முஸ்லிம்களின் உரிமைகளையும் சலுகைகளையும் பெற்றுக் கொடுத்து அவர்களின்
அபிலாஷைகளை நிறைவேற்றுவதன் மூலம் இந்த வாக்குப் பலத்தை அதிகரித்துக் கொள்ளலாம். அமைச்சர்
ரிஷாத் பதியுதீன் இன்று ஆளும் கட்சியில் இருந்தாலும், மன்னார் மாவட்ட முஸ்லிம்களின் உரிமைகளுக்காக குரல்
கொடுத்து அவர்களுக்குரிய சலுகைகளை பெற்றுக் கொடுப்பதுடன் அவர்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவதிலும்
கவனம் செலுத்தி வருகின்றார். அதனால் அவரின் அரசியல் தலைமைத்துவத்தை அப்பகுதி மக்கள்
தொடர்ந்தும் விரும்புகின்றனர். இதை ஆளும் கட்சிக்குள் இருக்கும் முஸ்லிம் தலைமைகள்
புரிந்து கொண்டு செயற்பட்டால், புத்தளத்திலும் முஸ்லிம்
மக்களின் ஆதரவை பெற்றுக் கொள்ளலாம்.

No comments:
Post a Comment