Sunday, April 7, 2013

இலங்கைக்கு இப்போது தேவை முறையான ஒழுங்குபடுத்தப்பட்ட ஒரு வெளிநாட்டுக் கொள்கை…..


வெறும் 22 மில்லியன் மக்களைக் கொண்ட எமது இலங்கைத் தேசத்திற்கு அமெரிக்கா, இந்தியா, சீனா, ஜப்பான் போன்ற நாடுகள் மத்தியில் ஏன் இவ்வளவு கிராக்கி? இந்த நாடுகளெல்லாம் ஏன் இலங்கையை விட்டுக் கொடுக்க விரும்புவதில்லை..?; இந்த நாடுகள் இலங்கைக்கு செய்யும் நேரடி மற்றும் மறைமுக உதவிகள் உண்மையில் இலங்கையின் மீது கொண்டுள்ள நெருக்கத்தினாலா அல்லது அதற்கும் அப்பால் ஒரு காரணம் இருக்கின்றதா? இது பற்றி நீங்கள் எப்போதாவது சிந்தித்துப் பார்த்துள்ளீர்களா…?

ஒரு காரணத்தைத் தவிர வேறு எந்தக் காரணமும் எனக்கு வெளிப்படையாகத் தெரிய வில்லை. அதுதான், இலங்கையை இராணுவ மூலோபாயத்திற்கான கேந்திர நிலையமாகப் பார்ப்பது. இந்து சமுத்திர மற்றும் பசுபிக் கடற்பரப்பில் தமது மேலாதிக்கத்தையும், அதிகாரத்தையும் வைத்திருப்பதற்காக இந்த நாடுகள் மேற்கொண்டு வரும் பிரயத்தனத்தில் குறி வைக்கப்படும் நாடாகவே இலங்கை காணப்படுகின்றது. இந்து சமூத்திரத்தில் சீனாவுக்கு உள்ள பெரும் அச்சுறுத்தல் இந்தியா. பசுபிக் கடற்பரப்பில் ஜப்பான் மற்றும் அமெரிக்கா. இதன் அடிப்படையில் தான் சீனா இந்தியாவைச் சுற்றியுள்ள நாடுகளில் தனது ஆதிக்கத்தை செலுத்த முனைகின்றது. இதனடிப்படையில், பாகிஸ்தான், நேபாளம், இலங்கை, இந்தோனேசியா போன்ற நாடுகளில் தனது இருப்பை சீனா நாளுக்கு நாள் உறுதி செய்து வருகின்றது. இதற்காகத்தான் அந்த நாடு இலங்கை போன்ற நாடுகளுக்கு தமது செல்வங்களை வாரிக் கொட்டுகின்றது. இதற்குப் போட்டியாக ஜப்பான், இந்தியா, அமெரிக்கா போன்ற நாடுகளும் இலங்கையை தம்வசம் வைத்துக் கொள்ள முனைகின்றன.

இந்த நாடுகளின் இந்தப் பிரயத்தனம்தான் இலங்கைக்கு கிடைத்த பாதுகாப்புக் கவசம்.. ஆனால், நாம் பெருமைப் பட்டுக் கொள்ளும் அத்தனை பாரிய செயற்திட்டங்களுக்கும், இராணுவப் பணிகளுக்கும் பின்னணியில் இருந்து செயற்படும் சக்திகள் இவைதான். அவர்களின் அதிகாரத்தைத் தீர்மானிக்கும் சக்தியாக இருக்கும் எமது நாட்டுக்கு எத்தனையோ விடயங்களை சாதிக்கலாம். ஆனால், அது வெரும் அபிவிருத்தி என்ற போர்வைக்குள் மாத்திரம் வரையறுக்கப்பட்டிருப்பதுதான் கவலைக்குரிய விடயம். சர்வதேச ரீதியில் எமது அந்தஸ்த்தையும், அபிமானத்தையும் விருத்தி செய்து கொள்வதற்கும், அதன் ஊடாக ஒரு வளர்ச்சியடைந்த நாடாக மாறுதவற்கும் நாம் இந்த நாடுகளின் ஆதரவுடன் எத்தனையோ காரியங்களை சாதிக்கலாம். ஆனால், நமது நாடு அத்தனை நாடுகளினதும் ஆதரவை எதற்காகப் பயன்படுத்துகின்றது? தமது ஆட்சியை நிலை நிறுத்துவதற்கான செயற்திட்டங்களுக்கே தற்போதைய அரசாங்கம் முக்கியத்துமளிக்கின்றது. இதற்கு கைமாறாக அந்த நாடுகளுக்கு இந்த அரசாங்கம் அடிபணிய வேண்டிய நிலை ஏற்படுகின்றது.

எமது நாடு சிரிய நாடாக இருப்பதால் மற்றைய நாடுகளின் இராணுவ ரீதியான, அதிகார ரீதியான, பொருளாதார ரீதியான பங்களிப்பு அவசியம்தான். அதற்காக நாம் அந்த நாடுகளின் நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்ப செயற்பட வேண்டியதில்லை. எமது நாட்டின் இருப்பையும், பலத்தையும், செல்வாக்கையும் நாம் உறுதிப்படுத்துவதற்காக செயற்பட வேண்டுமேயொழிய அந்த இருப்பையும், பலத்தையும், செல்வாக்கையும் பலவீனப்படுத்தும் முயற்சியில் இறங்கக் கூடாது. அதேபோல், ஒரு குறிப்பிட்ட வல்லரசுக்கு மாத்திரம் ஆதரவை வழங்கக் கூடிய போக்கையும் இலங்கை அரசாங்கம் கடைபிடித்து விடக்கூடாது.

குறிப்பாக, இந்த நாடுகளுக்கு இடையிலான அதிகாரப் போட்டியில நமது நாட்டை சிக்க வைத்து விடாமல் ஒரு நடுநிலைப் போக்கை நமது நாடு கடைபிடிக்கலாம். தற்போது இலங்கைக்கு எதிராக தென்னிந்தியாவில் இடம்பெற்று வரும் போராட்டங்களுக்காக இலங்கை அரசாங்கம் முழு இந்தியாவையும் எதிரி நாடாக பார்க்க முடியாது. அவ்வாறு பார்க்க நினைத்தால் இந்து சமுத்திரத்தில் எமது நாட்டை ஒரு எதிரி நாடாக பார்ப்பதையும் விட இதை சீனாவுக்கு விட்டுக் கொடுக்க முடியாது என்ற எண்ணத்துடன் இலங்கையை எந்த வழியிலாவது தம்வசப்படுத்தும் முயற்சியையே இந்தியா மேற்கொள்ளும். இலங்கை இந்தியாவுக்கு எதிராக விரல் நீட்டினாலும், அந்நாடு எமக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்கிக் கொண்டிருப்பதற்கான காரணம் இதுதான். ஆனால், அதற்கும் ஓர் எல்லையுண்டு. இலங்கை வெளிநாடுகளிடமிருந்து கிடைக்கப் பெறும் தமது நாட்டுக்கான ஆதரவை சமநிலையாக பேண வேண்டும். ஒரு நாட்டிற்காகவேனும் தமது ஆதரவை அதிகரிக்க நினைத்தால் மற்றைய நாடுகள் வெறுப்புக் கொண்டு கூட்டாகச் சேர்ந்து செயற்பட வாய்ப்புண்டு. அதன்போது, சிக்கித் தவிக்கும் நாடாக இலங்கை காணப்படலாம்.

இவ்வாறு சமநிலையான வெளிநாட்டு உறவை பேணாத போக்கு தற்போதைய ஆட்சியில் காணப்படுகின்றது. சில உள்நாட்டுப் பிரச்சினைகளும் கூட இவ்வாறு அந்த நாடுகள் ஒன்று சேர்வதற்கு ஒரு பொய்க் காரணமாக அமைந்து விடலாம். குறிப்பாக இலங்கை தமிழர்கள் விடயத்தைப் பற்றி இந்தியாவில் பெரும்பாலான அரசியல்வாதிகள் குரலெழுப்புவதற்கான காரணத்தைக் கூட நாம் வெறும் தமிழப் பற்றாகவே பார்க்கின்றோம். ஆனால், அதற்கும் அப்பால், இந்தக் காரணத்தைக் காட்டி இலங்கையை சிக்க வைத்து இலங்கையின் ஊடாக (சீனா போன்ற நாடுகளின் இராணுவ ரீதியான செல்வாக்கினால்) இந்தியா எதிர்கொள்ளக் கூடிய சவாலை சமாளிப்பதற்காகக் கூட அவர்கள் அவ்வாறு செய்யலாம். ஏனெனில் இந்த அரசியல்வாதிகளெல்லாம் யுத்த காலத்தில் இந்த தமிழ் மக்களுக்காக காத்திரமாக குரலெழுப்பவில்லை. அதேபோல், அமெரிக்கா போன்ற மேற்கத்தேய நாடுகளும் லிபியா, ஆப்கானிஸ்தான், ஈராக் போன்ற நாடுகளைப் பார்த்தது போல் இலங்கை விடயத்தில் தலையிட வில்லை. ஏனெனில் யுத்த காலத்தில் இலங்கை பல நாடுகளின் ஆதரவை சமமாக பேணி வந்தது. இராணு ரீதியான உதவிகளைப் பெறுவதிலும் கூட இந்தியா, பாகிஸ்தான், சீனா, இஸ்ரேல், அமெரிக்கா என்ற வேறுபாடு இல்லாமல் அனைத்து நாடுகளினதும் ஆதரவைப் பெற்று செயற்பட்டு வந்தது. அதனால், அப்போதைக்கு அது ஒரு பிரச்சினையாகக் காணப்படவில்லை.

ஆனால், தற்போது தமக்கான ஆதரவை ஒரு பக்கத்திலிருந்து மாத்திரம் எதிர்பார்க்கும் போக்கை அரசாங்கம் கடைபிடித்து வருவதால், இலங்கை மீது கவனம் செலுத்தும் ஏனைய நாடுகள் இலங்கைக்கு எதிராக செயற்பட விளைகின்றன. இலங்கையை சர்வதேச ரீதியில் சிக்கவைத்து அந்த சிக்கலில் இருந்து விடுபட வேண்டுமானால், தமது நிபந்தனைகளுக்கு இலங்கை உடண்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டுக்குள் தள்ளப்பார்க்கின்றன அந்த நாடுகள். மறுபுறத்தில் தமது அதிகாரத்திற்கு பாத்திரமாக இருக்கும் இலங்கையை இந்த முடிச்சுக்களில் இருந்து கழற்றி விட சீனா, ரஷ்யா மற்றும் அவற்றுக்கு சார்பான நாடுகள் முயற்சிக்கின்றன.   

இலங்கையை இராணுவரீதியில் தம்வசப்படுத்திக் கொள்ளும் நாடு இந்து மற்றும் பசுபிக் கடற்பரப்பில் தம் ஆதிக்கத்தை தக்கவைப்பது இலகுவானதாகும். குறிப்பாக இது சீனாவுக்கு மிகவும் சாதகமாக இருக்கும். அந்த நாடு, தென் கிழக்காசிய நாடுகளிலும், தெற்காசியாவில் இந்தியா தவிர்ந்த நாடுகளிலும், கிழக்கு ஆபிரிக்க நாடுகளிலும் மத்திய கிழக்கில் சில நாடுகளிலும் தமது ஆதிக்கத்தை செலுத்தி வருகின்றது. முழு ஆசியாவையும் தன்னாதிக்கத்தின் கீழ் கொண்டு வருவதற்கு அச்சுறுத்தலாக இருக்கும் நாடுகள் தான், இந்தியா, ஜப்பான், கொரியா போன்ற நாடுகள். இவ்வாறான நிலையில் தெற்காசியாவில் இந்தியாவுக்கு எதிரான தமது நகர்வை முன்னெடுக்க வேண்டுமானால், இலங்கையை தம்வசப்படுத்திக் கொள்வது சீனாவுக்கு தவிர்க்க முடியாத ஒன்றாக காணப்படுகின்றது. அதேபோல், இலங்கையை விட்டுக் கொடுப்பது தமக்கு அச்சுறுத்தல் என்பதை இந்தியாவும் விளங்கி வைத்துள்ளது. மறுபுறத்தில் இலங்கை மீதான சீனாவின் ஆதிக்கத்தை குறைப்பதற்கு ஜப்பான் ஒரு வகையில் முயற்சித்து வருகின்றது. அமெரிக்காவும் சீனாவின் இந்த மேலாதிக்கத்தைக் குறைப்பதற்காக ஏனைய நாடுகளுக்கு உதவுவதற்கு ஆர்வம் காட்டி வருகின்றது.

இவ்வாறு இலங்கையை அடிப்படையாகக் கொண்டு இந்த நாடுகள் அதிகாரப் போட்டியில் ஈடுபடுவதற்கு இடமளிக்கலாமா இல்லையா என்பதை தற்போதைய அரசாங்கம்தான் தீர்மானிக்க வேண்டும். அவ்வாறு அந்த நாடுகள் மோதிக் கொள்வதற்கு அல்லது முரண்பட்டுக் கொள்வதற்கு காரணமாக இலங்கை இருப்பதால்தான் இவ்வளவு பிரச்சினை என்பதையும் நாம் மறந்து விடக்கூடாது. இந்த விடயத்தில் இலங்கை அரசாங்கம் சரியான, முறையான ஒரு வெளிநாட்டுக் கொள்கையை வகுத்து தமது நிகழ்ச்சி நிரலை ஒழுங்குபடுத்திக் கொள்ள வேண்டும். 

No comments: