கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்னர் காணாமல் போன புத்தளம் சமீரகமவைச் சேர்ந்த ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தரும் புத்தளம் சமூக நம்பிக்கை நிதியத்தின் பணிப்பாளர்களில் ஒருவருமான பட்டானி றாசீக் (55) என்பவர் ஓட்டமாவடி காவத்தைமுனை பிரதேசத்தில் வீடொன்றிலிருந்து சடலமாக மீட்டெடுக்கப்பட்டார்.
11.2.2010 அன்று பொலனறுவைக்கு வந்த மேற்படி ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் பொலனறுவையில் வைத்து காணாமல் போனார். இவரை தேடி அவரது உறவினர்களும் பொலிசாரும் விசாரணை செய்து வந்த நிலையில் கடந்த 8.7.2011அன்று அவரின் நண்பரான நௌசாத் என்பவரை கிளிநொச்சியில் வைத்து கொழும்பு ரகசியப்பொலிசார் கைது செய்ததையடுத்து அவர் வழங்கிய வாக்கு மூலத்தின் படி 16.7.2011 அன்று ஓட்டமாவடி காவத்தைமுனையைச்சேர்ந்த முஸ்தீன் என்பவர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டார்.
இவர் வழங்கிய தகவலையடுத்து நேற்று (28.7.2011) காலை வாழைச்சேனை மாவட்ட நீதவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.றியாழின் உத்தரவின் பேரில் காவத்தைமுனையிலுள்ள வீடொன்றில் ஓய்வு பெற்ற கிராம உத்திகோத்தரின் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
வாழைச்சேனை மாவட்ட நீதிவான் நீதிமன்ற நீதிபதி ஏ.எம்.றியாழ், மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் சட்ட வைத்திய ஆலோசகர் டாக்டர் குணதிலக மற்றும் மட்டக்களப்பு போதனா வைத்திய சாலையின் சட்ட வைத்திய அதிகாரி டாக்டர் எம்.ஏ.றகுமான் ஆகியோரது முன்னிலையில் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
ஓய்வு பெற்ற கிராம உத்தியோகத்தர் பட்டானி ராசீக்கின் சடலத்தை அவரது மகன் ராசீக் றிஸ்க்கான் முகம்மட் அடையாளம் காட்டினார். சடலத்தை மட்டக்களப்பு வைத்திய சாலைக்கு கொண்டு சென்று பிரேத பரிசோதனை மற்றும் மரபனு பரிசோதனை செய்யுமாறு நீதிபதி றியாழ் உத்தரவிட்டார்.
மரபனு பரிசோதனை செய்த பின்பு எதிர்வரும் செவ்வாய்க்கிழமை (2.8.2011) சடலம் உறவினர்களிடம் கையளிக்குமாறு நீதிபதி இதன் போது உத்தரவிட்டார். சந்தேக நபரான முஸ்தீன் பொலிசாரினால் ஸ்த்தளத்திற்கு அழைத்து வரப்பட்டு அவர் அடையாளம் காட்டிய இடத்தில் பலத்த பொலிஸ் மற்றும் இரானுவ பாதுகாப்புடன் சடலம் தோண்டி எடுக்கப்பட்டது.
மேற்படி சந்தேக நபரான முஸ்தீனின் சின்னம்மாவின்; வளவில் கட்டப்படுக்கொண்டிருக்கும் வீட்டின் ஒரு பகுதியிலேயே இச்சடலம் புதைக்கப்பட்டிருந்தது.

No comments:
Post a Comment