Saturday, July 19, 2014

உலக நாடுகளால் ஓரங்கட்டப்படும் பலஸ்தீனம்

பலஸ்தீனம் சர்வதேச நாடுகளால் ஓரங்கட்டப்பட்டுள்ள தேசம் என்றால் தவறில்லை. உண்மையில் தற்போது ஹமாஸ் என்ற போர்வையில் பலஸ்தீனம் மீது இஸ்ரேல் மேற்கொண்டு வரும் யுத்தத்தற்கு சர்வதேச நாடுகள் கொண்டிருக்கும் ஸ்திரமற்ற நிலைப்பாடே காரணமாக அமைந்துள்ளது.

பலஸ்தீன் 133 நர்டுகளுடன் சட்டப்படியான இராஜதந்திர உறவுகளை பேணி வரும் ஒரு நாடாகும். அதேபோல், யுனெஸ்கோ அமைப்பிலும் அங்கம் வகிக்கின்றது. இப்படி ஒரு நாடு என்ற அந்தஸ்த்தை பெறுவதற்கு தகுதி இருந்தும் பலஸ்தீன் இதுவரை சர்வதேச நாடுகளால் மறுக்கப்பட்டு வருகின்றது.

இரண்டு வருடங்களுக்கு முன்னர் தமது நாட்டுக்கு உத்தியோகபூர்வ அந்தஸ்த்தை வழங்குமாறும், இஸ்ரேலின் யுத்தக் குற்றங்களையும், மனிநேயத்திற்கு எதிரான குற்றங்களையும் விசாரிக்குமாறு கோரி பலஸ்தீன் முன்வைத்த கோரிக்கை சர்வதேச நீதிமன்றத்தினால் குறிப்பாக அதன் பிரதான வழக்குரைஞர் மொரினோ ஒக்கம்போவினால் நிராகரிக்கப்பட்டது. இஸ்ரேலினால் யுத்தக் குற்றம் இடம்பெற்றதா என்ற விடயம் அவரால் தெளிவுபடுத்தப்படாத அதேவேளை, ஐக்கிய நாடுகள் சபை அல்லது சர்வதேச நீதிமன்றத்தில் இணைந்துள்ள 121 நாடுகள் பலஸ்தீனை ஒரு நாடு என ஏற்றுக் கொள்ளும் வரை பலஸ்தீன் தொடர்பில் முடிவெடுக்கும் அதிகாரம் தனக்கு இல்லை என அவர் குறிப்பிட்டிருந்தார்.

இதேநேரம், ஐக்கிய நாடுகள் சபையில் இணைந்து கொள்வதற்காக பலஸ்தீன் விடுத்துள்ள கோரிக்கையும் நீண்டகாலமாக மறுக்கப்பட்டு வருகின்றது.  அதேநேரம், காசா மக்களின் பாதுகாப்பு குறித்து நான்காவது ஜெனீவா சாசனத்தின் 147ஆவது உறுப்புரை வலியுறுத்துகின்றது. தற்போது காசா மக்களுக்கு எதிராக இஸ்ரேல் மேற்கொண்டு வரும் யுத்தம் இந்த உறுப்புரையை மீறுகின்றது. அது மட்டுமன்றி மனிதப் படுகொலைகளும் இடம்பெறுகின்றன.


ஒரு நாடு என்ற அந்தஸ்த்தை மத்திரமல்ல, மனிதர்கள் என்ற அடிப்படையில் வழங்கப்படும் பாதுகாப்பைக் கூட பெற்றுக் கொள்ள முடியாத நிலைக்கு இன்று பலஸ்தீன மக்கள் மாறியிருக்கின்றார்கள். தமக்குரிய பாதுகாப்பையும், உரிமைகளையும் அவர்களால் மாத்திரம் தற்காத்துக் கொள்ள முடியாது. இந்த விடயத்தில் சர்வதேச நாடுகள் குறிப்பாக முஸ்லிம் உலகம் அக்கரையுடன் கவனம் செலுத்தி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதையே தற்போதைய நிலைமை எடுத்துக் காட்டுகின்றது.

No comments: