தாய்மொழி தினம்…
தனது தாய், தாய் மண் போன்றே தாய் மொழி விடயத்திலும் ஒருவரிடம் இருக்கக்
கூடிய தொடர்பை மற்றைய தொடர்புகள் விஞ்சிவிட முடியாது. எவருக்கும் இரண்டு தாய்கள் இருக்க
முடியாது. அதுபோலத்தான் இரண்டு தாய் நாடுகளோ, இரண்டு தாய்மொழிகளோ இருக்க முடியாது. தாய் மொழி ஒருவரின் அடையாளத்தை
எடுத்துக்காட்டும் ஒரு அத்தாட்சியாகும். உலகில் எவரும் தனது தாய்மொழிக்காக குரல் கொடுப்பதற்கு
பின்நிற்பதில்லை.
பிறந்ததலிருந்து ஒரு தாய் பிள்ளைகள் மனதிலும், வாழ்விலும் இடம் பிடிப்பதைப் போலவே
நாம் பிறந்ததிலிருந்தே தாய்மொழியும் எங்களுடனேயே ஒட்டி நிற்கின்றது. தாயிடமிருக்கும்
ஒரு குழந்தை மீது பிற்காலத்தில் வெளித்தரப்பினர் எவ்வளவுதான் பாசம் காட்டினாலும் தாயுடன்
இருக்கும் அந்த ஆத்மீக உறவு என்றுமே மாறுபடுவதில்லை. அது போல எவ்வளவுதான் இரண்டாம்
மொழியை நாம் கற்றுக் கொண்டாலும் தாய் மொழியுடன் இருக்கும் எமது பிணைப்பை வேறுபடுத்தி
விட முடியாது. இந்தத் தொடர்பின் முக்கியத்துவம் காரணமாகத்தான் ஒவ்வொரு வருடமும் பெப்ரவரி
21 ஆம் திகதி
சர்வதேச தாய்மொழி தினமாக அனுஷ்டிக்கப்படுகின்றது.
தாய்மொழி தினத்தின் வரலாறு பற்றி உங்களுக்குத் தெரியுமா? இதற்கான பல பின்னணிச் சம்பவங்கள்
காணப்படுகின்றன.
1947 ஆம் ஆண்டுதான் இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தது. அதன் பின்னர், வங்காளப் பிராந்தியத்தின் ஒருபகுதி
இந்தியாவுக்கும், ஒரு பகுதி
பாகிஸ்தானுக்கும் பிரிந்து சென்றன. கிழக்குப் பகுதி கிழக்குப் பாகிஸ்தான் என்றே அன்று
அழைக்கப்பட்டு வந்தது.
1948 ஆம் ஆண்டில் பாகிஸ்தானின் உத்தியோகப+ர்வ மொழியாக உருது மொழி
பிரகடனப் படுத்தப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு மொழிகளைப் பயன்படுத்தும் பல இனத்தவர்களும்
மதப் பிரிவினரும், மரபுவழி
சமூகமும் பல நெருக்கடிகளை சந்திக்க நேரிட்டது. அதனைத் தொடர்ந்து பல்வேறு முரண்பாடுகளும்
இடம்பெறத் துவங்கின..
கிழக்குப் பாகிஸ்தானில் வாழ்ந்த பங்காளி மொழியைப்
பேசும் மக்களின் எதிர்ப்பு பெரியளவில் இடம்பெற்றது. அரசாங்கம் இந்த எதிர்ப்பு நடவடிக்கையை
முடக்கியது..
எனினும், 1952 ஆம் ஆண்டு பெப்ரவரி 21 ஆம் திகதி மீண்டும் அங்கு எதிர்ப்புக் கிளம்பியது. டாக்கா பல்கலைக்கழக
மாணவர்கள் இந்த எதிர்ப்பு நடவடிக்கையில் முன்னின்று செயற்பட்டார்கள். இந்த எதிர்ப்பைக்
முடக்குவதற்காக பொலிசார் மேற்கொண்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் நான்கு பல்கலைக்கழக மாணவர்கள்
உயிரிழந்தார்கள். தாய்மொழிக்காக வங்காள மக்கள் நடத்திய இந்த போராட்டம் அத்துடன் நின்றுவிடவில்லை.
1956 ஆம் ஆண்டு
பெப்ரவரி 26 ஆம் திகதி
பாகிஸ்தானின் உத்தியோகபூர்வ மொழிகளில் ஒன்றாக பங்காளி மொழி பிரகடனப்படுத்தப் பட்டதைத்
தொடர்ந்து வங்காள மக்களின் போராட்டம் வெற்றி கண்டது.
1971 ஆம் ஆண்டு பங்களாதேஷ் நாடு உருவானதைத் தொடர்ந்து அந்நாட்டின்
உத்தியோகபூர்வ மொழியாக வங்காள மொழி பிரகடனப்படுத்தப்பட்டது.
தமது தாய்மொழியின் உரிமைக்காக வங்காள மாணவர்கள் உயிர்நீத்த
தினமான பெப்ரவரி 21 ஆம் திகதி
சர்வதேச தாய்மொழி தினமாக பிரகடனப்படுத்துவதற்கு ஐக்கிய நாடுகள் சபை 1999 ஆம் ஆண்டு தீர்மானித்தது. அதன்
பின்னர் 2000 ஆம் ஆண்டு
தொடக்கம் பல்வேறு தொணிப்பொருளின் கீழ் சர்வதேச தாய்மொழி தினம் உலகம்பூராவும் அனுஷ்டிக்கப்பட்டு
வருகின்றது.
இந்தத் தினத்தில் யுனெஸ்கோ அமைப்புடனும், ஐக்கிய நாடுகளின் முகவர் நிறுவனங்களுடனும்
இணைந்து உலக மக்கள் மத்தியில் பேசப்பட்டு வரும் மொழி மற்றும் கலாசார பல்வகைத் தன்மை
போன்றே தாய்மொழிகளையும் ஊக்குவிப்பதற்காக பல்வேறு வேலைத் திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு
வருகின்றன. தனது தாய்மொழி தொடர்பான உரிமையை நினைவுபடுத்தல், ஏனைய மொழித் திறமையை ஏற்படுத்துவதற்காக
ஊக்குவித்தல் போன்ற செயற்பாடுகளும் இந்தத் தினத்தில் இடம்பெறுகின்றன. இம்முறை தாய்மொழி
தினத்தின் சர்வதேச தொணிப்பொருள் தாய்மொழியும் புத்தகமும் என்பதாகும். நூல்கள் மூலம்
மொழி மற்றும் கலாசார பல்வகைத் தன்மையை ஊக்குவிப்பதற்கும்;, சர்வதேசத் தொடர்புகளை வலுப்படுத்துவது
குறித்தும் இது வலியுறுத்துகின்றது.
No comments:
Post a Comment