சப்ரகமுவ, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாண சபைத் தேர்தல்களுக்கான அனைத்து
நடவடிக்கைகளும் தயார் என தேர்தல்கள் செயலகம் தெரிவித்துள்ளது. இந்த தேர்தல்கள் தொடர்பான
மற்றுமொரு பேச்சுவார்த்தை இந்தவாரம் தேர்தல்கள் ஆணையாளரின் தலைமையில் தேர்தல்கள் செயலகத்தில்
நடைபெறும்.
இதில் சம்பந்தப்பட்ட மாவட்ட தெரிவத்தாட்சி உத்தியோகத்தர்களும்
உதவித் தேர்தல் ஆணையாளர்களும் கலந்துகொள்வார்கள் என மேலதிக தேர்தல்கள் ஆணையாளர் ஆர்.எம்.ஏ.எல்.ரத்நாயக்க
தெரிவித்தார். வேட்புமனுக்களை ஏற்றுக்கொள்ளுதல் உள்ளிட்ட தேர்தலுடன் சம்பந்தப்பட்ட
பல விடயங்கள் குறித்து அங்கு கலந்துரையாடப்படும். தபால் மூலம் வாக்களிப்பதற்காக இன்று
முதல் விண்ணப்பிக்க முடியும் என அவர் குறிப்பிட்டார்.
மாகாண சபை தேர்தலில் போட்டியிடுவதற்கு 64 கட்சிகள் தகுதி பெற்றுள்ளன.
2011ம் ஆண்டு வாக்காளர் இடாப்பு தேர்தலுக்காக பயன்படுத்தப்படும். தேர்தலை மிகவும் நியாயமாகவும்
சுதந்திரமாகவும் நடத்துவதற்கு தேவையான அனைத்து ஒழுங்குகளையும் தேர்தல்கள் செயலகம் மேற்கொள்ளுமென
திரு.ரத்னாயக்க எமது நிலையத்திற்குத் தெரிவித்தார்.
ஏற்றுக்கொள்ளப்பட்ட அரசியல் கட்சிகள் தற்போது தயாராகி வருகின்றன.
கட்சி மட்டத்தில் இது சம்பந்தமான பேச்சுவார்த்தைகள் இடம்பெறுகின்றன. சில கட்சிகள் கூட்டணி
அரசாங்கத்துடனும் சில கட்சிகள் தனித்தனியாகவும் இந்தத் தேர்தலில் போட்டியிடவுள்ளன.
வேட்புமனுக்கள் எதிர்வரும் 12ஆம் திகதி முதல் 19ஆம் திகதி வரை
ஏற்றுக்கொள்ளப்படும். அதன் பின்னர் தேர்தல் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படும்.
சுயேட்சைக் குழுக்கள் எதிர்வரும் 18ஆம் திகதி நண்பகல் 12 மணி
வரை கட்டுப்பணம் செலுத்தலாம்.

No comments:
Post a Comment