Saturday, July 7, 2012

நேட்டோப் படையினர் செல்வதற்கான விநியோக மார்க்கங்களை மீண்டும் திறப்பதற்கு பாகிஸ்தான் எடுத்துள்ள தீர்மானம் குறித்து பாகிஸ்தான் எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் விமர்சனம்..


ஆப்கானிஸ்தானுக்குள் நேட்டோப் படையினர் செல்வதற்கான விநியோக மார்க்கங்களை மீண்டும் திறப்பதற்கு பாகிஸ்தான் எடுத்துள்ள தீர்மானம் அமெரிக்காவுடனான பதற்றத்தை தணித்துள்ளது. எனினும், இந்த தீர்மானம் தொடர்பான உடண்பாடு ஏன் இரகசியமாக எட்டப்பட்டது? இதன் நிபந்தனைகள் பற்றிய விபரம் ஏன் பகிரங்கப்படுத்தப்படவில்லை என்பது பற்றி எதிர்த்தரப்பு அரசியல்வாதிகள் கேள்வியெழுப்பியுள்ளனர்.

கடந்த நவம்பர் மாதம் அமெரிக்க ஆளில்லா விமானம் நடத்திய தாக்குதலில் 24 பாகிஸ்தானிய படைவீரர்கள் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து பாகிஸ்தானிலிருந்து ஆப்கானிஸ்தானுக்கு செல்லும் நேட்டோப் படைகளுக்கான விநியோக மார்க்கங்களை பாகிஸ்தான் மூடியிருந்தது.

அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டன் இந்த கொலைகளுக்காக வருத்தம் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த விநியோ மார்க்கத்தை திறப்பதாக பாகிஸ்தானின் உயர் சிவில் மற்றும் இராணுவத் தலைவர்களைக் கொண்ட ஒரு மன்றம் அறிவித்தது. குறிப்பிட்ட படைவீரர்கள் கொல்லப்பட்டமைக்காக அமெரிக்க பகிரங்கமாக மன்னிப்புக் கோர வேண்டும் என பாகிஸ்தான் வலியுறுத்தியிருந்த நிலையில் இந்த முன்னேற்றம் எட்டப்பட்டுள்ளது.

எவ்வாறாயினும், நேட்டோ படைகளுக்கான விநியோக மார்க்கங்களை திறப்பதற்கு அமைச்சரவைப் பாதுகாப்புக் குழு மேற்கொண்ட தீர்மானமானது ஆப்கானிஸ்தானில் தொடரும் யுத்தத்தில் மேலும் பங்கெடுக்க வேண்டிய நிலை பாகிஸ்தானுக்கு ஏற்படும் என்று பாகிஸ்தான் முஸ்லிம் லீக் கட்சி உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் தெரிவித்துள்ளன. அதேநேரம், அமெரிக்க ராஜாங்க செயலாளர் உண்மையிலேயே இடம்பெற்ற அசம்பாவிதத்திற்கு நேரடியாக மன்னிப்புக் கோராமல், வருத்தம் தெரிவித்திருப்பதை பலர் விமர்சித்திருக்கின்றார்கள்.

எவ்வாறாயினும், இந்த விமர்சனங்களுக்கான பதில்களை வழங்க பாகிஸ்தான் பிரதமர் ரஜா பர்வேஷ் அஷ்ரவ் மறுத்து விட்டார். நேட்டோப் படைகளுக்கான விநியோக மார்க்கங்களை தொடர்ந்தும் மூடி வைத்திருப்பது அமெரிக்காவுடனான உறவில் பாதிப்பை ஏற்படுத்துவதோடு, நேட்டோ அமைப்பில் அங்கத்துவம் வகிக்கும் ஏனைய 49 உறுப்பு நாடுகளை முறித்துக் கொள்ள வேண்டிய நிலை ஏற்படும் என அவர் கூறியிருக்கின்றார்.

No comments: