Tuesday, June 5, 2012

21ம் நூற்றாண்டின் கடைசி வெள்ளி நகர்வு இன்று


21ம் நூற்றாண்டின் கடைசி வெள்ளி நகர்வு இன்று அதிகாலை 3.30 முதல் காலை 10.21 வரை இடம்பெறுமென நவீன தொழில்நுட்பம் தொடர்பான ஆதர் சி கிளார்க் நிறுவனம் தெரிவிக்கின்றது. எனினும், இலங்கையில் இதனை அதிகாலை 5.54 ன் பின்னரே பார்வையிட முடியும். இதன் உச்சக்கட்டம் காலை 7.03 ஆகும்.

ஆதர் சி கிளார்க் நிறுவனம் ஏற்பாடு செய்துள்ள வெள்ளி நகர்வை கண்காணிக்கும் முகாம் திருகோணமலை, நிலாவெளி கடற்கரையில் இன்று இடம்பெறும். கொழும்பு பல்கலைக்கழக விளையாட்டுத் திடலிலும் முகாமொன்று அமைக்கப்படும். www.uocmas.info அல்லது www.accimt.ac.lk ஆகிய இணையத்தளங்களின் ஊடாக இந்த வெள்ளி நகர்வை நேரடியாக காண முடியும்.

இதேவேளை, வெள்ளி நகர்வை பார்வையிடுவதற்கான கண்காணிப்பு முகாமொன்று ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக இலங்கை கோள் மண்டலத்தின் விரிவுரையாளர் திருமதி கே.ரி.கே. கோரலகம தெரிவித்தார். இன்று காலை 7 மணிமுதல் 10 மணிவரை இந்த முகாம் இடம்பெறவுள்ளதோடு, விசேட உரையும் ஒழுங்கு செய்யப்பட்டுள்ளது. எவருக்கும் இதில் பங்கேற்க முடியும். இன்று அதிகாலை 3.39 லிருந்து பகல் 10.21 வரை வெள்ளி மாற்றம் இடம்பெறுவதாக நவீன தொழில்நுட்பம் தொடர்பான ஆத்தர் சி கிளார்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

வெள்ளி மாற்றத்தை வெற்றுக் கண்களால் பார்ப்பது பொருத்தமற்றதாகும். இதற்காக திரையைக் கொண்ட தொலைக்காட்டியை பயன்படுத்துவது அவசியமாகும். அதிகாலை 6 மணிக்கும் 6.15 க்கும் இடைப்பட்ட நேரத்தில் இதனை வெற்றுக் கண்களால் அவதானிக்க முடியும் என்று கொழும்பு பல்கலைக்கழகத்தின் பௌதீக விஞ்ஞான பேராசிரியர் சந்தன ஜயரட்ன தெரிவித்துள்ளார். இதன் பின்னர் பார்வையிடுவதற்கு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது அவசியமென அவர் வலியுறுத்தினார்.

No comments: