Saturday, July 9, 2011

தெற்கு சூடான் இன்று முதல் உலகின் புதிய தேசம்

தெற்கு சூடான். இது இன்று முதல் உலகின் புதிய தேசம். தெளிவாக எடுத்தியம்பக் கூடிய நிலப்பகுதி (ஆட்புலம்), அதில் வசிக்கும் சனத்தொகை, அந்த மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்ட அரசாங்கம் (சர்வஜன வாக்கெடுப்பு மூலம்) ஆகிய மூன்று அம்சங்களுடன் ஏனைய நாடுகளுடன் தொடர்பு வைத்துக் கொள்ளும் திறனையும், அதனூடாக சர்வதேச அங்கீகாரத்தையும் பெற்றுக் கொண்டார் ஒரு பிராந்தியம் கூட அரசாக தோற்றம் பெறலாம். இதற்கு நல்ல உதாரணம் தெற்கு சூடான்தான்.

பல வருடங்களாக வடக்கு சூடானுடன் மோதலில் ஈடுபட்ட வந்த தெற்கு சூடான் பிராந்திய மக்கள் இன்று முதல் சுதந்திர இறைமையயுள்ள நாடொன்றின் பிரஜைகள். 2005 ஆம் ஆண்டு செய்து கொள்ளப்பட்ட சமாதான உடண்படிக்கைக்கு அமைய நடத்தப்பட்ட சர்வஜன வாக்கெடுப்பில் தெற்கு சூடானை அதிகாரபூர்வமான நாடாக மாற்றியமைப்பதற்கு அப்பிராந்திய மக்கள் இந்த வருட ஆரம்பத்தில் ஒப்புதல் வழங்கினார்கள்.

தெற்கு சூடானை சுதந்திர நாடாக அரசாக பிரகடனப்படுத்தும் நிகழ்வில் வடக்கு சூடானின் ஜனாதிபதி ஒமர் அல் பஷிரும், ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பேன் கீ மூனும் கலந்து கொள்கின்றார்கள். தெற்கு சூடானின் தலைநகர் ஜூபாவில் இந்த வைபவம் இடம்பெறுகின்றது. நகரில் பொருத்தப்பட்டுள்ள மணிக்கூடு பூச்சியம் என்ற நிலையிலிருந்து ஆரம்பித்த சந்ர்ப்பத்தில் அந்நாட்டின் புதிய தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
ஐக்கிய நாடுகள் சபையினால் அங்கீகரிக்கப்படும் 193 ஆவது நாடாக தெற்கு சூடான் விளங்குகின்றது. ஆபிரிக்காவிலிருந்து ஐக்கிய நாடுகள் சபையின் அங்கீகாரத்தைப் பெறும் 54 ஆவது நாடாக இந்த நாடு விளங்குகின்றது.

2005 ஆம் ஆண்டு சூடானின் மக்கள் விடுதலை இராணுவத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்ட ஜனாதிபதி ஒமர் அல் பஷீர் கருத்து வெளியிடுகையில், தமது நாடு தெற்கு சகோதர நாட்டுன் இணைந்து செயற்படும் என்றும், அவர்களது அரசாங்கத்தை அமைப்பதற்கு உதவி செய்யப்படும் என்றும், அந்த நாடு நிலையான அபிவிருத்தி மிக்க நாடாக விளங்கும் என்றும் தெரவித்துள்ளார்.

தெற்கு சூடான் எண்ணை வளம் மிக்க ஒரு நாடு. ஆனால், உலகில் மிகவும் குறைந்த வளர்ச்சியை எட்டியுள்ள நாடாகும். அங்கு 5 வயதை அடைவதற்கு முன்னர்  ஏழு குழந்தைகளில் ஒரு குழந்தை உயிரிழக்கின்றது.

இதேநேரம், இவ்விரு சூடான்களுக்கும் இடையில் இனிமேலும் பிரச்சனைகள் வராமலிருக்க புதிய எல்லைகளை தீர்மானிப்பதற்கும், சூடான் அரசாங்கம் பெற்ற கடன்களையும், எண்ணை வளங்களையும் குறிப்பிட்ட அளவீட்டின் அடிப்படையில் பிரித்துக் கொள்வதற்கும் இரு நாடுகளும் இணங்க வேண்டியுள்ளது.

இதேவேளை தெற்கு சூடானில் புதிதாக அமைதிகாக்கும் படையினரை நிறுத்துவதற்கு ஐக்கிய நாடுகளின் பாதுகாப்புச் சபை நேற்று தீர்மனித்தது. புதிதாக பிரகடனப்படுத்தப்பட்டுள்ள இந்த தேசத்தின் சமாதானத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் வகையில் இந்தப் படையினர் நிறுத்தப்படவுள்ளனர். இதற்கமைய, அங்கு ஏழாயிரம் இராணுவ வீரர்களும், 900 சர்வதேச பொலிசாரும், மனித உரிமை அதிகாரிகள் உட்பட ஐக்கிய நாடுகளின் அதிகாரிகளும் தங்கியிருப்பார்கள். 

No comments: