Saturday, July 9, 2011

லிபியா மீதான சர்வதேச நாடுகளின் அழுத்தங்கள் வெற்றி பெறுமா?


இவரின் இந்தக் கூற்றில் உள்ள நியாயங்களை சர்வதேச ஊடகங்கள் சுட்டிக்காட்டியிருக்கின்றன. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாநாயக அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு அப்பால் செயற்படும் எந்த சக்தியினதும் நடவடிக்கைகள்; அந்த நாட்டினாலேயே கையாளப்பட வேண்டும். இதுதான் அந்த நாட்டின் இறைமைக்கு சர்வதேச நாடுகள் வழங்கும் சுதந்திரம். மற்றுமொரு நாட்டின் அரசியல் சுதந்திரத்தில் தலையிடுவதை ஐக்கிய நாடுகள் சாசனத்தின் 2(4) உறுப்புரை கூட அனுமதிப்பதில்லை.

இவ்வாறிருக்க இறைமையுள்ள அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் கிளர்ச்சியாளர்கள் தரப்பிற்கு சர்வதேச நாடுகள் பல்வேறு வகையிலும் உதவி செய்து வருகின்றன.

பிரான்ஸ் அரசாங்கம் இந்தக் கிளர்ச்சியாளர்களுக்கு அணுவாயுதங்கள், ரொக்கட் ஏவு தளங்கள், துப்பாக்கிககள், தாங்கிகளை அழிக்கும் ஏவுகணைகள் உட்பட பல்வேறுபட்ட ஆயுதங்களை வழங்கியிருக்கிறது. ஏப்ரல் மாத நடுப்பகுதியில் த நியு யோர்க் டைம்ஸ் பத்திரிகை வெளியிட்ட செய்தியின் படி, பெங்காசியை தளமாகக் கொண்ட கிளர்ச்சியாளர்கள் வெளிநாடுகளில் இருந்து ஆயுதங்களை பெற்றிருப்பதாக தெரிவித்தது. ஆனால், அந்த நாடுகளின் பெயர் விபரங்களை அந்த செய்திப் பத்திரிகை வெளியிடவில்லை. கடந்த சில மாதங்களாக அமெரிக்க மற்றும் பிரித்தானிய விசேட படையினர் கிளர்ச்சியாளர்களுக்கு பயிற்சியளித்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உண்மையிலேயே, லிபியா மீதான குண்டுத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்படுவதற்கு முன்னரே இந்தக் கிளர்ச்சியாளர்களுக்கு ஆயுதங்களை வழங்கி பயிற்சியளிக்கும் நடவடிக்கை ஆரம்பித்து விட்டது. லிபியாவுக்கு எதிராக யுத்தம் மேற்கொள்வதென பல மாதங்களுக்கு முன்னரே தீர்மானிக்கப்பட்டு விட்டது.

சர்வதேச குற்றவியல் நீதிமன்றம் கூட ஒரு ஏகாதிபத்தியவாதிகளின் சாதமாகத்தான் இயங்குகின்றது. அது சட்டரீதியான நீதிமன்றமாக இயங்கவில்லை என்பதை லிபியா மீதான முடிவுகள் எடுத்துக் காட்டுகின்றன. இந்த நீதிமன்றத்தின் தலைவர் ஜோஸ் லூயிஸ் மொரன் ஒகம்போ உண்மையில் பாதிக்கப்பட்ட லிபியாவுக்காக குரல் கொடுக்கவில்லை. அடுக்கடுக்காக குற்றமிழைத்து வரும் அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகிய சதிகார நாடுகளுக்கு சார்பாகவே தனது தீர்ப்பை வழங்குகின்றார்.

கடந்த மே மாதம் திரு. ஒகம்போ கத்தாபி மீதும், அவரது மகன் ஷைப் அல் இஸ்லாம் மீதும், மற்றுமொறு மைத்துனரான உளவுப் பிரிவுத் தலைவர் அப்துல்லா அல் சனூசி மீதும் பிடியாணை பிறப்பிக்கப்பட வேண்டும் என குறிப்பிட்டார். இவர்கள் மூவரும் மனிதநேயத்துக்கு எதிராக பொது மக்கள் மீது தாக்குதல் நடத்துகின்றார்கள் என்பதே அவரின் குற்றச்சாட்டு. எனினும், இதற்கான எந்த சான்றுகளும் நிறூபிக்கப்படவில்லை.

அதன் பின்னர், கடந்த 27 (ஜூன்) ஆம் திகதி இவர்கள் மூவரையும் கைது செய்யுமாறு சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் தலைவர் திரு. ஒகம்பே உத்தரவிட்டார். மனிதநேயத்திற்கு எதிராக இவர்கள் மீது சாட்டப்பட்ட குற்றங்களுடன் இவர்களுக்கு மறைமுகத் தொடர்பு உள்ளதற்கான நியாயமான வாய்ப்புக்கள் உள்ளதாக அவர் சுட்டிக்காட்டினார். எனினும். எதுவித உறுதியான ஆதாரங்களையோ, அதிகாரங்களையோ அவர் சுட்டிக்காட்டவில்லை. உண்மையில் லிபியா சர்வதேச குற்றவியல் நீதிமன்றின் உறுப்பினர் அல்ல. அதேபோல், அமெரிக்கா, சீனா, ரஷ்யா, இந்தியா உள்ளிட்ட பல நாடுகள் இதன் உறுப்புரிமையை பெறவில்லை.

அதேநேரம், சர்வதேச சட்டம் என்பது சிவில் சட்டத்தைப் போன்று விரும்பியோ விரும்பாமலோ கடைபிடிக்க வேண்டியதொன்றல்ல. அது இணக்கத்தின் அடிப்படையில் அடிபணிவதாகும். இவ்வாறிருக்க, லிபியத் தலைவர்கள் மீது பிடியாணை பிறப்பிக்கும் அதிகாரம் சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு உண்டா என்ற கேள்வி எழுகின்றது. அதிலும், ஐக்கிய நாடுகளின் நிரந்தர உறுப்பு நாடுகள் இந்த நீதிமன்ற நிபந்தனைகளை முழுமையாக ஏற்றுக் கொள்ள மறுக்கும் நிலையில் லிபியா, சூடான் போன்ற நாடுகள் அதன் தீர்ப்புக்களை முழுமையாக ஏற்றுக் கொள்ளும் என்பதை எவ்வாறு நம்ப முடியும். எனினும், உறுப்பு நாடுகள் விரும்பினால் தமது நாட்டுக்கு வரும் போது அவரை கைது செய்யும் இயலுமை காணப்படுகின்றது.

இது இவ்வாறிருக்க தான் பதவி விலகுவதற்கு முன்னர் இந்த பிடியாணையை வாபஸ்பெற்றுக் கொள்ள வேண்டும் என முஅம்மர் கத்தாபி சர்தேச நீதிமன்றத்தை வலியுறுத்தியுள்ளார். ஆனால் இந்த மிரட்டலை தாம் ஏற்றுக் கொள்ளப் போவதில்லை என நீதிமன்றத்தின் பிரதி வலக்கரிஞர் பட்டோ பென்சோடா தெரிவித்துள்ளார்.

சுதந்திர நாட்டின் இறைமைக்காக சர்வதேச அழுத்தங்களில் இருந்து மீள்வதற்காக போராடி வரும் லிபியாவின் நடவடிக்கையில் நியாயமிருக்கிறது. அவரின் போராட்டம் வெள்ளையின நேட்டோ நாடுகளுக்கு எதிரானதாகும் என்பதை கர்பியன் சமுதாய அரசாங்கங்கள் விளங்கியிருக்கின்றன. நேட்டோ அமைப்பின் வெள்ளையின ஆக்கிரமிப்புக்களை நிறுத்துமாறு அந்த அரசாங்கங்களின் ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. லிபியாவுக்கு உதவும் ஆபிரிக்க ஒன்றியத்தின் முயற்சிகளுக்கு தமது ஒன்றியம ஆதரவு வழங்கும் என 15 உறுப்பு நாடுகளைகொண்ட கெரிகொம் ஒன்றியம் தெரிவித்துள்ளது. ஐக்கிய நாடுகள் சபையின் தீர்வுத் திட்டத்தின் அடிப்படையில் லிபியாவில் செயற்பட்டு வரும் நேட்டோ படையினர் பொதுமக்களையும், மக்கள் குடியிருக்கும் பகுதியையும் இலக்கு வைத்து தாக்குதல் நடத்துகின்றார்கள். இது ஐக்கிய நாடுகளின் தீர்வுத் திட்டத்தை மீறும் செயலாகும் என்பது இந்த நாடுகளின் வாதம். ஆபிரிக்க சார்பு கொள்கைகளை லிபியா பின்பற்றுவதும், அதன் எரிபொருள் வளமுமே இந்தத் தாக்குதல்களுக்கான பிரதான காரணம் என அந்த நாடுகள் கூறுகின்றன.

லிபியாவுக்கு எதிராக அமெரிக்கா முன்னெடுக்கும் முயற்சிகளுக்கு அந்த நாட்டிலும் கூட ஆதரவு குறைந்து வருகின்றது. லிபியாவிலுள்ள கிளர்ச்சியாளர்க்கு நேரடியாக அமெரிக்கா உதவுவதை தடுக்கும் வகையில் அந்நாட்டின் பிரதிநிதிகள் சபை தீர்மானம் மேற்கொண்டுள்ளது. சபையில் பேசிய குடியரசுக் கட்சி உறுப்பினர்களும், ஜனநாயக் கட்சி உறுப்பினர்களும் லிபியா மீதான அமெரிக்காவின் படையெடுப்பை விமர்சித்தார்கள். லிபியாவுக்கு எதிரான தாக்குதல்களை மேற்கொள்வதற்கு அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா காங்கிரசின் ஒப்புதலை ஒருபோதும் பெற்றுக் கொள்ளவில்லை என்பதால் இந்த இராணுவ நடவடிக்கை சட்ட விரோதமானது என அவர்கள் சாடினர். எவ்வாறாயினும், லிபியா மீதான அமெரிக்காவின் இராணுவ நடவடிக்கைகளுக்கு சபையில் அங்கம் வகிக்கும் 229 பேரில் 199 பேர் ஆதரவு வழங்கினார்கள். பெரும்பாலான ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் அதாவது ஒபாமா தலைமை வகிக்கும் ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் இதற்கு எதிராக வாக்களித்தனர்.

இதேவேளை, லிபியா தொடர்பான தனது நிகழ்ச்சி நிரலில் இருந்து அமெரிக்க செனட் ஒரு நகல் தீர்வுத் திட்டத்தையும் வாபஸ் பெற்றுக் கொண்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. லிபியாவுக்கு எதிரான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமெரிக்க இராணுவத்திற்கு அனுமதி வழங்குவதாக இந்த நகல் தீர்வுத் திட்டம் அமைய இருந்தது. ஆனால், அமெரிக்க செனட் லிபியாவுக்கு எதிரான யுத்தத்திற்கு முக்கியத்துவம் அளிப்பதை விட்டு விட்டு அந்நாட்டு வரவு செலவுத் திட்டம் குறித்தும், கடன் பிரச்சனை தொடர்பாகவும் கவனம் செலுத்தியுள்ளது. அமெரிக்க செனட்டின் பெரும்பான்மைத் தலைவர் ஹெரி ரெய்ட் கருத்து வெளியிடுகையில் வரவு செலவுத் திட்டத்தை கருத்திற் கொண்டு இந்த நகல் தீர்வுத் திட்டம் தொடர்பான வாக்கெடுப்பு நடத்தப்படுவதற்கு முன்னர் இது ரத்துச் செய்யப்பட்டதாக குறிப்பிட்டார். மற்றைய அனைத்து பிரச்சனைகளையும் விட கடன் பிரச்சனை குறித்தே கூடுதல் கவனம் செலுத்தப்பட வேண்டும் என குடியரசுக் கட்சி உறுப்பினர்கள் வலியுறுத்தியதைத் தொடர்ந்து இதற்கான நடவடிக்கை ரத்துச் செய்யப்பட்டதாக ஏ.பீ.சீ. செய்திஸ்தாபனம் அறிவித்தது. இந்த சந்தர்ப்பத்தின் அமெரிக்கா வெளிநாட்டு கொள்கை விடயத்தில் கவனம் செலுத்துவதையும் விட தன் சொந்த நாட்டில் உள்ள நிதிப் பிரச்சனை குறித்து கவனம் செலுத்த வேண்டியது அவசியம் என்பது குடியரசுக் கட்சி உறுப்பினர்களின் அபிப்பிராயம்.
லிபியாவில் தொடரும் மோதல் காரணமாக மருந்துப் பொருட்கள் உட்பட ஏனைய அத்தியவசியப் பொருட்களுக்கு தட்டுப்பாடு நிலவி வருகின்றது. இந்நிலையில், மனிதநேயத்தை மீறும் வகையில் அந்நாடு மீது பொருளாதார தடைகளை விதிப்பதற்கு சர்வதேச நாடுகள் உத்தேசித்துள்ளன. இவ்வாறான சந்தர்ப்பத்தில்தான் உள்நாட்டு எதிர்வாத சக்திகள் அதாவது லிபிய அரசாங்கமும், கிளர்ச்சியாளர்களும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டியுள்ளது. நண்பனின் எதிரி எனது நண்பன் என்ற அதிகாரத்திற்கான வரைவிலக்கணம் எனக்கு ஞாபகம் வருகின்றது. இதைத்தான் லிபியக் கிளர்ச்சியாளர்கள் பின்பற்றி வருகின்றார்கள். ஆனால், பிரச்சனை நமக்கும்தான் என்று வரும் போது இந்த முதுமொழியில் மாற்றம் அவசியம். நமக்காக நாம்...இந்த வாசகத்தின் அடிப்படையில் லிபிய நாட்டவர்கள் செயல்பட வேண்டிய காலம் கணிந்துள்ளது.

இதன் அடிப்படையில் யுத்தத்தால் சீர்குழைந்துள்ள லிபியான மீதான பொருளாதார தடைகளை தவிர்க்கும் நோக்கில் இரு தரப்பும் ஐக்கிய நாடுகளுடன் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தவாரம் உலக சுகாதார அமைப்புடன் பேச்சுவார்த்தை நடத்தியுள்ள இவ்விரு தரப்பும் தடை செய்யப்படும் பொருட்களில் இருந்து நிவாரணமளிக்கக் கூடிய பொருட்களின் பட்டியல் பற்றி விளக்கியிருப்பதாக கூறப்படுகின்றது. சர்ச்சை இடம்பெறும் பகுதிகளில் மருந்துப் பொருட்களுக்கு பெரும் தட்டுப்பாடு நிலவுவதாக தெரிகிறது.

தற்போது தடைகளின் கீழ் ஏனைய நாடுகளில் இருந்து சில அத்தியவசியப் பொருட்களை இறக்குமதி செய்யும் இயலுமை லிபியாவுக்கு இருக்கின்ற போதிலும், அதற்கான பணத்தை வழங்குவதில் சிக்கல் நிலவுகின்றது. ஏனனில் லிபியாவின் சொத்துக்கள் வெளிநாடுகளில் முடக்கப்பட்டுள்ளன. இதனால், லிபியாவுடன் கொடுக்கல் வாங்கல்களை மேற்கொள்ள வெளிநாட்டு வங்கிகள் மறுத்து வருகின்றன. உதாரணமாக டட்சு நாட்டிலிருந்து லிபியா கோரியிருந்த  தடுப்பூசிகளுக்கான கட்டளையை விநியோகிப்பது இடைநிறுத்தப்பட்டுள்ளது. லிபிய வங்கியிலிருந்து கடன்பத்திரத்தை ஏற்றுக் கொள்ள டட்சு வங்கியான ஏ.பி.என் அம்ரோ மறுக்கலாம் என்ற சந்தேகமே இதற்கான காரணம். லிபியா மீதான பொருளாதார தடைகள் பெரும் பின்னடைவை ஏற்படுத்தலாம் என அந்த வங்கி கருதுகின்றது.

உண்மையில் லிபியா சர்வதேச நாடுகளின் தொடர்பில் இருந்து வேறுபடுத்தப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. ஆனால், பௌதீக ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் மேற்கொண்டு வரும் தம்மீதான அழுத்தங்களுக்கு தாம் அஞ்சப் போவதில்லை என லிபியத் தலைவர் முஅம்மர் கத்தாபி தெரிவித்துள்ளார். தனது நாட்டு மக்களின் ஆதவு தனக்கு இருக்கும் வரை வெளிநாட்டு சக்திகளால் ஒன்றும் செய்ய முடியாது என அவர் கூறியிருக்கின்றார். தமது நாட்டுப் பிரச்சனையை தாமே தீர்த்துக் கொள்வதாக அவர் தெரிவித்துள்ளார். இதில் மூக்கை நுளைக்காமல் லிபிய அரசாங்கத்திற்கு சந்தர்ப்பத்தை அளித்து விட்டு நேட்டோ நாடுகள் தமது படையினரை வாபஸ் பெற்றுக் கொள்ள வேண்டும் என அவர் வலியுறுத்தியிருக்கின்றார். லிபியாவின் சுதந்திரப் போராட்டத்திற்காக ஒரு பாரிய படைiயே அவர் தயார் படுத்தியிருக்கின்றார். இதில் பெண்களும் அடங்குகின்றனர்.
அதேநேரம், கிளர்ச்சியாளர்களுக்கு மேற்கத்தேய நாடுகள் நேரடியாக வழங்கி வரும் உதவிகளை குறைக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளது. அந்தந்த நாடுகளில் இதற்கான ஆதரவு குறைந்து வருகின்றமையே இதற்கான காரணம்.



இந்நிலையில், மாற்று அரசியல் கொள்கையை கடைபிடிக்கும் போக்கு லிபியத் தலைவரிடம் காணப்படுகின்றது. அரசியலமைப்புக்கு இணங்க ஆட்சி தனது மகனிடம் ஒப்படைக்கப் படுமானால், தான் ஜனநாயக ரீதியில் பதவி விலகத் தயார் என அவர் தெரிவித்துள்ளார்.

இந்த முன்னேற்றத்தையும், லிபியான மீதான சர்வதேச நாடுகளின் அழுத்தத்தையும் கருத்திற் கொண்டு கிளர்ச்சியாளர்கள் நாட்டின் ஒருமைப்பாட்டுக்காக ஏதாவது ஒரு நல்ல தீர்மானத்தை எட்ட வேண்டிய காலம் தற்போது உருவாகியுள்ளது. லிபியாவின் வரலாற்றை நல்லதாகவோ, மோசமானதாகவோ மாற்றியமைக்கும் பலம் கிளர்ச்சியாளர்களுக்கும் உண்டு. நாளைய சமூகத்தின் குரல் இவர்களின் முடிவில்தான் தங்கியிருக்கிறது. 

No comments: