காசாவுக்கு எதிராக தொடுக்கப்பட்டுள்ள யுத்தத்தில் இஸ்ரேலின்
இலக்கு தோல்வி கண்டிருப்பதாக அந்நாட்டு சுற்றுலாத் துறை அமைச்சர் உசி லந்தாவு தெரிவித்துள்ளார்.
காசாவில் இஸ்ரேலிய படைவீரர்கள் பாரியளவில் இராணுவ
நடவடிக்கைகளை தீவிரப்படுத்தியுள்ள போதிலும், அரசாங்கம்
எதிர்பார்த்த எந்தவொரு குறிக்கோளையும் அடைய முடியவில்லை என்றும், இஸ்ரேல் மீதான பலஸ்தீனர்களின் ஏவுகணைத் தாக்குதல்களை தடுத்த
நிறுத்த முடியாதிருப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
இது விடயத்தில் பிரதமர் பென்ஜமின் நெட்டன்யாகூ கடைபிடிக்கும்
கொள்கைகள் தவறாகும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார். ஹமாஸ் தரப்பின் தாக்குதல்களால்
ஏற்பட்டுள்ள இழப்புக்களின் அளவு குறித்து அவர் அதிர்ச்சி வெளியிட்டுள்ளார். செனல் 10 தொலைக்காட்சிக்கு பேட்டியளிக்கும் போது அவர் இந்தக் கருத்துக்களை
வெளியிட்டார்.
இஸ்ரேலுக்கு மூலோபாய ரீதியில் பெரும் அச்சுறுத்தலாக இருந்து
வரும் ஹமாஸ் தரப்பின் சுரங்கவழிப் பாதைகளுக:கு எதிராக இஸ்ரேல் நடவடிக்கை எடுக்க தவறியுள்ளதாகவும்
லன்டாவு சாடியுள்ளார். இஸ்ரேல் தொடர்ந்தும் தோல்வியுற்றால் அதன் பலவீனம் அனைவருக்கும்
தெரிந்து விடும் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஹமாஸ் தரப்பை அழித்தொழிக்கும் நடவடிக்கையை இஸ்ரேல் சரியாக நிறைவேற்ற
தவறினால், அடுத்த முறை ஹமாஸ் அமைப்பு பெரியளவிலான கனரக ஏவகணைகளையும், இரசாயன ஆயுதங்களையும் பயன்படுத்த வாய்ப்புள்ளது என்று இஸ்ரேல்
அமைச்சர் லந்தாவு தெரிவித்துள்ளார். அல் கைதா அமைப்புக்கு எதிராக அமெரிக்கா எவ்வாறு
செயற்பட்டதோ அவ்வாறே ஹமாசுக்கு எதிராக இஸ்ரேல் செயற்பட வேண்டும் என்று இஸ்ரேலிய சுற்றுலாத்
துறை அமைச்சர் கூறியிருக்கிறார்.

No comments:
Post a Comment