Sunday, October 20, 2013

ஈரானுக்கு எதிராக மேலதிகத் தடைகளை விதிப்பதற்கான ஒரு சட்டமூலத்தை நிறைவேற்றுமாறு தாம் வலியுறுத்தவுள்ளதாக அமெரிக்க காங்கிரசில் அங்கம் வகிக்கும் குடியரசுக் கட்சி செனட்டர்கள் குழுவொன்று தெரிவித்துள்ளது.

 அதேநேரம்,, ஏற்கனவே முடக்கப்பட்டுள்ள பல பில்லியன் டொலர்கள் பெறுமதியான ஈரானிய சொத்துக்களை தளர்த்துவதற்கு ஜனாதிபதி பரக் ஒபாமாவின் நிர்வாகம் ஆராய்ந்து வருவதாக த நியுயோர்க் டைம்ஸ் பத்திரிகை தெரிவித்துள்ளது.

தமது அணுசக்தி திட்டம் தொடர்பில் ஈரானிய அரசாங்கம் மேற்கொண்டு வரும் நல்லெண்ண முயற்சிகளுக்கு பதிலளிக்கும் வகையில் அமெரிக்க நிர்வாகம் இது குறித்து ஆராய்ந்து வருவதாக வெள்ளை மாளிகையின் பேச்சாளர் ஒருவரை மேற்கோள் காட்டி அந்தப் பத்திரிகை சுட்டிக்காட்டியுள்ளது.

டைம்ஸ் பத்திரிகையின் இந்த செய்திக்கு பதிலகளித்து கூற்றொன்றை வெளியிட்டுள்ள செனட்டர்களான Lindsey Graham (R-South Carolina), Kelly Ayotte (R-New Hampshire), and Mark Kirk (R-Illinois) ஆகியோர் ஈரானுக்கு எதிராக கடுமையான தடைகளை விதிக்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஈரான் அதன் யுரேனிய செறிவ+ட்டல் நடவடிக்கைகளை கைவிடும் வரை, அமெரிக்க அரசாங்கம் புதிய தடைகளை இடைநிறுத்தவோ, முடக்கப்பட்ட சொத்துக்களை தளர்த்துவதற்கோ முயற்சிக்கக் கூடாது என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

ஈரான், ஆயுதப் பரவலாக்கல் தடுப்பு ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டுள்ள அதேவேளை, சர்வதேச அணுசக்தி முகவரமைப்பின் உறுப்பு நாடாகவும் இருந்து வருகிறது. இதனால், அமைதி வழியிலான நோக்கங்களுக்காக செறிவூட்டல் உள்ளிட்ட அணுசக்தி தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதற்கான அதிகாரம் தமது நாட்டுக்கு இருப்பதாக ஈரானிய அரசாங்கம் வலியுறுத்தி வருகின்றது.

இந்நிலையில், அமெரிக்க செனட்டர்கள் ஈரானுக்கு எதிரான தடைகளை அதிகரிப்பதற்கான ஒரு சட்டமூலத்தை முன்மொழிந்துள்ளனர். இந்த உத்தேச சட்டமானது கடந்த ஜூலை மாதம் அமெரிக்க மக்கள் பிரதிநிதிகள் சபையில் நிறைவேற்றப்பட்ட சட்டமூலத்தை ஒத்ததாகும் என்று யு.எஸ்.ஏ டுடே பத்திரிகை குறிப்பிட்டுள்ளது. இதற்கமைய, அடுத்த வருடத்திற்கான ஈரானின் எண்ணை ஏற்றுமதியை நாளொன்றுக்கு ஒரு மில்லியன் பீப்பாய்களால் குறைக்குமாறும், ஈரானுக்கு எதிராக இராணுவ அச்சுறுத்தலை விடுக்குமாறும் அந்த சட்டமூலத்தில் கூறப்பட்டுள்ளது.

இந்த உத்தேச சட்டமூலம் குறித்து எதிர்வரும் 28ஆம் திகதி செனட் வங்கியியல் குழுக் கூட்டத்தில் கலந்துரையாடப்படவுள்ளது. எனினும், அடுத்த மாதம் ஏழாம், எட்டாம் திகதிகளில் ஜெனீவாவில் நடைபெறவுள்ள ஈரானுக்கும், ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் நிரந்தர உறுப்பு நாடுகளுக்கும் இடையிலான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை நடைபெறும் வரை, இந்த சட்ட மூலம் செனட் வாக்கெடுப்புக்கு வராது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈரானுக்கும், ஆறு வல்லரசு நாடுகளுக்கும் இடையில் தற்போது நடைபெற்று வரும் பேச்சுவார்த்தைகளை சீர்குலைப்பதற்கு இஸ்ரேல் முயற்சித்து வருவதாக ஈரானிய வெளிவிவகார அமைச்சர் ஜாவத் ஷெரிப் தெரிவித்துள்ளார்.


அதேநேரம், அமெரிக்கா மற்றும் மேற்கு நாடுகளுடனான ஈரானின் தொடர்புகள் இலகுபடுத்தப்படுவதற்கு இஸ்ரேலும், சவுதி அரேபியாவும் எதிராக இருப்பதாக பினியங் கனிங்ஹேம் என்ற ஆய்வாளர் தெரிவித்துள்ளார். ஈரானியக் குடியரசின் புகழ் பிராந்திய ரீதியில் அதிகரிப்பதை அந்த நாடுகள் விரும்பவில்லை என்று அவர் ப்ரஸ் டீ.வீக்கு எழுதியுள்ள கட்டுரையில் தெரிவித்துள்ளார்.

No comments: