மியன்மாரிலிருந்து ரொஹிங்யா முஸ்லிம்களை விரட்டுவதற்கான
அந்நாட்டு ஜனாதிபதி தேய்ன் ஷேனின் திட்டம் இனச் சுத்திகரிப்பு நடவடிக்கையாகும் என்று
சஹித் சுல்பிக்கார் அலிபூட்டோ விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப நிறுவகத்தில் பேராசிரியாக
இருக்கும் குலாம் தக்கி பங்கேஷ் தெரிவி;த்துள்ளார்.
இந்த விடயத்தில் நோபல் சமாதான விருது
பெற்ற ஆஹ் சன் சூகி மௌனம் சாதிப்பது ஆச்சரியமூட்டுகின்றது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
ரொஹிங்யா முஸ்லிம்கள் மியன்மாரிலிருந்து விரட்டப்பட்டு ஐக்கிய நாடுகளின் அகதி முகாம்களுக்கு
அனுப்பப் பட வேண்டும் என அந்நாட்டு ஜனாதிபதி கூறியிருக்கின்றார். சுமார் 10 இலட்சம் பேரைக் கொண்ட
ரொஹிங்யா முஸ்லிம் சமூகத்தை ஏற்றுக் கொள்ள மியன்மார் அரசாங்கம் மறுத்து வருகின்றது.
சரியான பிரஜா உரிமையைக் கூட பெறாத அவர்கள் பெரும் நெருக்கடியை எதிர்ககொள்கின்றார்கள்.
இவர்கள் அண்மைய நாடுகளிலில் இருந்து வந்து
குடியேறியவர்கள் என்பதால் இவர்கள் சட்டவிரோதக் குடியிருப்பாளர்கள் என அந்த அரசாங்கம்
அடையாளப்படுத்த முனைகின்றது. அதில் உண்மை இருப்பினும், பல தலைமுறைகளாக தாம்
வாழ்ந்திருப்பதால் தமக்கு வாழ்வதற்கு இடமளிக்குமாறு ரொஹிங்யா மக்கள் கோரி நிற்கின்றனர்.
1981 ஆம் ஆண்டு இராணுவ ஆட்சிக்கு
முன்னர் தம்மாள் வாக்களிக்க முடிந்ததாகவும், 5 முஸ்லிம் பிரதிநிதிகளை தமது பகுதியிலிருந்து அனுப்ப
முடிந்ததாகவும் அவர்கள் கூறியிருக்கின்றனர். வெளிநாடு செல்வதற்கு கடவுச்சீட்டுக் கூட
இல்லாத ரொஹிங்யா முஸ்லிம்கள் பங்களதேசுக்கு சென்று அங்கிருந்து வெளிநாடு சென்று வருகின்றனர்.
அண்மையில், ஒரு முஸ்லிம் இளைஞன் ஒரு பௌத்த யுவதி மீது
காதல் கொண்டு அவளுடன் ஓடிச் சென்றதைத் தொடர்ந்து மியன்மாரில் இந்தப் பிரச்சனை விஷ்வரூபம்
எடுத்தது. இந்த இளைஞன் கைது செய்யப்பட்டு சிறைச்சாலையில் வைத்து கொல்லப்பட்டான். அவனுக்கு
உதவிய மேலும் இரண்டு முஸ்லிம் இளைஞர்கள் மீதும் தண்டனை நிறைவேற்றப்பட்டது. இதற்கு எதிர்ப்புத்
தெரிவித்த முஸ்லிம்கள் கேவலமாக கொல்லப்பட்டனர். உண்மையில், இந்த காதல் பிரச்சனையையும்
விட, இன சுத்திகரிப்பு என்ற
விடயமே அங்கு மேலோங்கி காணப்படுகின்றது. இந்த இனச் சுத்திகரிப்புக்கு அந்நாட்டு இராணுவ
ஆட்சி துணையாகவுள்ளது. ஜனநாயகம் என்று குரல் கொடுக்கும் சூக்கி போன்ற தலைமைகளும் ரொஹிங்யா
முஸ்லிம்களை ஆதரித்து பேசுவதாக இல்லை. இந்தப் பிரச்சனை தொடர்பாக ஆராய்வதற்காக அங்கு
சென்ற ஐக்கிய நாடுகளின் பிரதிநிதி ஒருவரும் இராணுவ ஆட்சியாளர்களால் விரட்டப்பட்டுள்ளார்.
கடந்த மாதம் ஜெனீவாவில் செய்தியாளர்களிடம்
கருத்து வெளியிட்ட ஆங் சன் சூக்கி ரொஹிங்யா முஸ்லிம்கள் மியன்மார் பிரஜைகளா என்று தனக்குத்
தெரியவில்லை எனக் குறிப்பிட்டிருந்தார். அனைத்து வெளிநாட்டுப் பிரச்சனைகளிலும் தலையிடும்
அமெரிக்கா இந்த விடயத்தில் மாத்திரம் மௌனம் சாதிப்பதாக பங்களதேஷ் தெரிவித்துள்ளது.
இரண்டு இனக்குழுக்களுக்கு மத்தியில் அதாவது
பௌத்தர்களை பெரும்பான்மையாகக் கொண்ட ரக்கின்ஸ் இனத்தவர்களுக்கும், முஸ்லிம்களை பெரும்பான்மையாகக்
கொண்ட ரொஹிங்யா இனத்தவர்களுக்கும் இடையில் இந்த முறுகல் நிலை தோன்றுகின்றது.
எவ்வாறாயினும், ஒரு இனத்தின் மீதான
வன்முறை கட்டவிழ்த்து விடப்படுவது அல்லது இன ஒதுக்குமறையானது சர்வதேச சட்டத்திற்கு
அமைய குற்றமான செயலாகும். இதற்குத் துணை கண்டு கொள்ளாமல் இருக்கும் மியன்மார் அரசாங்கமும், அதன் தலைமைகளும் ஏன்
இதுவரை சர்வதேச சட்டம் என்ற வரையறைக்குள் கொண்டு வரப்பட்டு கண்டிக்கப்படவில்லை.
அனைத்து இனரீதியான ஒதுக்குமுறைகளையும் ஒழிப்பது
தொடர்பான சர்வதேச சாசனம் 1965 ஆம் ஆண்டு கைச்சாத்திடப்பட்டு 1969 ஆம் ஆண்டு அமுலுக்கு வந்தது. ஐக்கிய நாடுகள் சாசனத்தின்
பரிந்துரைகளில் இன ஒதுக்குமறைகள் தொடர்பாக கூறப்பட்டுள்ள விடயங்களை அடிப்படையாகக் கொண்டு
இந்த சாசனம் வரையப்பட்டுள்ளது.
அரசியல், பொருளாதார, சமூக, கலாசார அல்லது மக்கள் வாழ்க்கையின் ஏனைய துறைகளில்
சமமான உரிமைகளையும், மனித உரிமைகளையும் பெற்று, அதனை அனுபவிப்பதற்கு தடையாக இருக்கும் வகையில் இனம், நிறம், பரம்பறை, தேசியம், இன உருவாக்கம் போன்றவற்றை
அடிப்படையாகக் கொண்டு வேறுபாடு காட்டுவது இன ஒதுக்கு முறையாகும் என இந்த சாசனம் கூறுகின்றது.
இவ்வாறான இன ஓதுக்குமுறைகள் ஏற்படுவதை தவிர்த்து
சம உரிமைகளையும் வாய்ப்புக்களையும் உறுதி செய்யும் பொறுப்பு அரச தரப்புக்கு உள்ளதாக
அந்த சாசனம் சுட்டிக்காட்டுகின்றது.
இவ்வாறான நிலையில், அதனை அமுல்படுத்த மியன்மார்
அரசாங்கம் தயங்குவது ஏன்? இந்த நடைமுறையை பின்பற்ற தவறும் அந்த அரசாங்கத்திற்கு கொடுக்கப்பட்ட சர்வதேச அழுத்தம்
என்ன? அவ்வாறு செய்திருக்கா
விட்டால் சர்வதேச சட்டத்தின் சமநிலையில் நியாயம் இருக்கிறதா?
இவ்வாறான பின்புலத்திலிருந்து விமர்சிப்பதற்கு
மேலதிகமாக, மியன்மாரில் சட்டரீதியாக
தண்டிக்கப்படும் நிலை அதாவது ரூல் ஒவ் லா இல்லை என்றே குறிப்பிடலாம். இந்த நிலையில், அங்கு ஜனநாயகத்தை எவ்வாறு
எதிர்பார்ப்பது.
பிரஜா உரிமை கொடுக்காவிட்டாலும் பரவாயில்லை.
ஒரு இனக் குழுவை நாசி ஜேர்மனியர்கள் யூதர்களை தண்டித்தது போல கொடுமைப் படுத்துவது எந்த
விதத்தில் நியாயம்.
முற்றும் முழுதாக கலாசார எல்லைகளுக்குள் இருந்து
மாத்திரம் மேற்கொள்ளப்படும் இந்த நடவடிக்கையை மனிதாபிமானமாக பார்க்கத் தவறுதேன்.

No comments:
Post a Comment