Saturday, June 30, 2012

ஈரானுக்கு எதிரான மேற்கத்தேய நாடுகளின் எண்ணை இறக்குமதித் தடைக்கு சீனா மீண்டும் எதிர்ப்பு


ஈரானுக்கு எதிரான மேற்கத்தேய நாடுகளின் எண்ணை இறக்குமதித் தடைக்கு சீனா மீண்டும் எதிர்ப்புத் தெரிவித்துள்ளது. ஈரானிலிருந்து எண்ணை இறக்குமதி செய்யப்படுவதானது சட்டரீதியானதும், நியாயமானதுமாகும் என சீன வெளிவிவகார அமைச்சின் பேச்சாளர் ஹொங் லே தெரிவித்துள்ளார்.

 மற்றுமொரு நாட்டின் மீது ஒரு நாடு ஒருதலைப் பட்சமாக தடைவிதிப்பதற்கு சீனா எப்போதும் எதிராகவே உள்ளது. இது உள்நாட்டு சட்டத்திற்கு முரணானதாகும். மூன்றாவது நாட்டின் மீது இவ்வாறான தடை விதிக்கப்படுவதையும் ஏற்றுக் கொள்ள முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஈரானுடனான எண்ணெய் வர்த்தகம் தொடர்பான அமெரிக்காவின் ஒருதலைப்பட்ச தடைககளிலிருந்து சீனாவை விலக்கிக் கொள்ளவுள்ளதாக அமெரிக்க ராஜாங்க செயலாளர் ஹிலரி கிளின்டன் தெரிவித்து மறுநாளே இந்தக் கருத்து வெளியாகியிருக்கின்றது. அமெரிக்காவின் இந்த ஒருதலைப்பட்சத் தடையை ஏற்றுக் கொள்ளத் தவறுவதானது மூன்றாம் தரப்பு நாட்டினதோ அல்லது சர்வதேச சமூகத்தினதோ அபிலாஷைகளுக்கு விரோதமானதோ ஐக்கிய நாடுகள் பாதுகாப்புச் சபையின் தீர்வுத் திட்டங்களை மீறும் செயலோ அல்ல என்று சீன வெளிவிவாகார அமைச்சின் பேச்சாளர் தெரிவித்துள்ளார். ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக அந்நாட்டின் மீது அழுத்தம் கொடுக்கும் நோக்குடனேயே அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் இந்தத் தடைகளை விதிக்கின்றன. இது அமெரிக்கா, இஸ்ரேல் உள்ளிட்ட நாடுகளின் இராணுவ ரீதியான காய் நகர்த்தலாகும் என கூறப்படுகின்றது. 



இந்நிலையில், ஈரானின் அணுசக்தி திட்டம் தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவது காலத்தை வீணடிக்கும் செயலென சவுதி அரேபியா தெரிவித்துள்ளது. அண்மையில், வலைகுடா ஒத்துழைப்பு மன்றத்தினதும், ஐரோப்பிய ஓத்துழைப்பு மன்றத்தினதும் பிரதிநிதிகள் கலந்து கொண்ட சமயம் இந்தத் தகவல் வெளியாகியது. ஈரானின் எண்ணை வர்த்தகத் தடையை நாளை முதல் அமுல்படுத்த அமெரிக்கா, ஐரோப்பிய நாடுகள் உட்பட அவற்றின் நேசநாடுகள் தீரமானித்துள்ள நிலையில் இந்தக் கருத்துக்கள் வெளியாகியிருகின்றன.

எவ்வாறாயினும், ஈரானுடன் ஆக்கபூர்வமான பேச்சுவார்த்தையில் ஈடுபட மேற்கத்தேய நாடுகள் தயாரில்லை என ஐக்கிய நாடுகளுக்கான ஈரானியத் தூதுவர் முஹமட் கசாயி தெரிவித்துள்ளார். மேற்கு நாடுகளின் சட்டத்திற்கு முரணான கோரிக்கைகளுக்கு தலை சாய்க்காமல் வெளிநாட்டு அழுத்தங்களை எவ்வாறு சமாளிப்பது என்பது பற்றி தமக்குத் தெரியும் என அவர் நேற்று ஐக்கிய நாடுகள் தலைமையகத்தில் செய்தியாளர்களிடம் தெரிவித்தார். அணுசக்தி பரவாலக்கல் தடுப்பு ஒப்பந்தத்தின் 4 ஆவது உறுப்புரைக்கு அமைய ஈரானுக்கு யுரேணியத்தை செறிவூட்டும் உரிமை உண்டு என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இதேவேளை, ஈரானின் எரிபொருள் துறை மீதான தடைகள் காரணமாக ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றிய எதிர்பார்ப்புக்களால் எண்ணெய் விலை ஒன்பது சதவீதத்தால் அதிகரித்துள்ளது. ஆகஸ்ட் மாதத்திற்காக விநியோகிக்கப்படவுள்ள ஒரு பீப்பாய் மென்ரக மசகு எண்ணெயின் விலை சுமார் ஏழு அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது.

No comments: