ஈரான் மீது அமெரிக்க விதித்துள்ள தடைகளை ரஷ்யாவின் முன்னணி வங்கியொன்று
விமர்சித்துள்ளது. ஈரானிய வங்கித் துறை மீது அமெரிக்க தடைகளை விதித்திருப்பதானது சர்வதேச
சட்டங்களை மீறும் செயலாகும் என நெஸ்டோக் வங்கியின் தலைவர் அந்ரேய் கொஸ்டின் தெரிவித்துள்ளார்.
அனைத்து உறுப்பு நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தகத்தை வலியுறுத்தும் சர்வதேச
நாணய நிதியத்தின் உறுப்புரையை மீறி அமெரிக்கா ஈரான் மீது நிதி மற்றும் பொருளாதாரத்
தடைகளை விதித்திருப்பதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் 31 ஆம் திகதி அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா ஈரானுக்கு எதிரான புதிய
தடைகள் மீதான சட்டத்தில் கைச்சாத்திட்டார். இதன்படி, ஈரானிடமிருந்து எண்ணையை இறக்குமதி செய்யும் நாடுகளும், ஈரானிய மத்திய வங்கியுடன் இது தொடர்பில் கொடுக்கல் வாங்கல்களை
வைத்துக் கொள்ளும் நாடுகளும் தண்டனைக்கு உள்ளாகும் என அமெரிக்கா எச்சரித்திருந்தது.
கடந்த ஜனவரி மாதம் 23 ஆம் திகதி பிரசல்ஸ் நகரில் கூடிய ஐரோப்பிய நாடுகளின்
வெளிவிவகார அமைச்சர்களும் அமெரிக்காவின் இந்த சட்டத்திற்கு வலு சேர்க்கும் வகையில்
ஈரானிடமிருந்து இறக்குமதி செய்யப்படும் அனைத்து எண்ணை உற்பத்திகளையும் தடை செய்வதற்கும், தமது ஐரோப்பிய எல்லைக்குள் காணப்படும் ஈரானிய மத்திய வங்கியின்
சொத்துக்களை முடக்குவதற்கும் தீர்மனித்தன.
அமெரிக்காவின் இந்த பொருளாதாரத் தடைகள் உலகலாவிய பொறுளாதார நெறிமுறையை
மீறிய செயல் என்பதால், அது சர்வதேச சட்டத்தை மீறிய செயல் என அண்மையில் ரஷ்ய
வெளி விவகார அமைச்சும் கருத்து வெளியிட்டிருந்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.
இதேநேரம்,
அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு
முன்னர், ஈரான் உறுதியான நடவடிக்கையை எடுக்க வேண்டும் என அமெரிக்க
ராஜாங்க செயலாள திருமதி ஹிலரி கிளின்டன் வலியுறுத்தியுள்ளார்;. ஈரானின் நடவடிக்கைகளை அடிப்படையாகக் கொண்டே தமது நாட்டின் தீர்மானம்
அமைந்திருக்கும் என அவர் நேற்று ஒஸ்லோ நகரில் தெரிவித்தார். ஈரானுக்கும், மேற்கத்தேய நாடுகளுக்கும் இடையிலான அடுத்த சுற்றுப் பேச்சுவார்த்தை
எதிர்வரும், 18 ஆம், 19 ஆம் திகதிகளில்
மொஸ்கோவில் இடம்பெறவுள்ளது.
அமெரிக்கா எவ்வாறான தடைகளை விதித்த போதிலும், ஈரானுடான கேஸ் குழாய்வழித் திட்டம் இடைநிறுத்தப்படமாட்டாது என
பாகிஸ்தான் வலியுறுத்தியுள்ளது. இந்தக் கருத்தை பாகிஸ்தான் ஜனாதிபதி அசிவ் அலி சார்தாரி, நேற்று ஈரானிய வெளி விவகார அமைச்சரிடம் கூறியிருக்கின்றார்.
இந்நிலையில், மத்திய
கிழக்குப் பிராந்தியத்திலுள்ள அமெரிக்க ராணுவத் தளங்கள் அனைத்தும் தமது ஏவகணைகள் சென்று
தாக்கவல்ல நிலையில் இருப்பதாக ஈரானின் உயர் இராணுவ அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
ஈரானுக்கு எதிரான இராணுவ ஆக்கிரமிப்புக்கள் இடம்பெறும் பட்சத்தில், அமெரிக்காவும், இஸ்ரேலும்
பலத்த நெருக்கடியை எதிர்கொள்ளும் என அவர் குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவினால் யுத்தத்தை
ஆரம்பிக்கலாம். ஆனால், அதன் முடிவு ஈரானின் கையில் உள்ளதாக அவர் கூறியுள்ளார்.



No comments:
Post a Comment