Saturday, June 2, 2012

ஹ_ஸ்னி முபாரக்கிற்கு ஆயுள் தண்டனை


எகிப்தின் முன்னாள் ஜனாதிபதி ஹ_ஸ்னி முபாரக்கிற்கும், அவரது ஆட்சிக்காலத்தில் உள்துறை அமைச்சராக இருந்த ஹபீப் அல் ஆதிலுக்கும் ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த வருடம் பெப்ரவரி மாதம் முபாரக் ஆட்சிக்கு எதிராக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது 900 பேர் கொல்லப்பட்டார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் இவர்கள் இருவருக்கும் இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இது தொடர்பான கடைசி தீர்ப்பு கெய்ரோ நீதிமன்றத்தினால் இன்று வழங்கப்பட்டது. ஹ_ஸ்னி முபாரக் தனது புதல்வர்களான அலா மற்றும் கமலுடன்  இணைந்து ஊழலில் ஈடுபட்டுள்ளார் என்ற குற்றச்சாட்டிற்கும் உள்ளாகியிருக்கின்றார். ஆனால், இந்தக் குற்றச்சாட்டுக்கள் நீதிமன்றத்தினால் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளதாகக் கூறப்படுகின்றது.

அதேபோல், ஆர்ப்பாட்டக்காரர்களை கொலை செய்தார்கள் என்ற குற்றச்சாட்டின் பேரில் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்ட மேலும் ஆறு பாதுகாப்புப் படை உறுப்பினர்கள் மீதான வழக்கும் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.

கெய்ரோ நீதிமன்றம் வழங்கிய இந்தத் தீர்ப்பைத் தொடர்ந்து நீதிமன்றத்திற்குள் பாதிக்கப்பட்டவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கும், பாதுகாப்பு அதிகாரிகளுக்கும் இடையில் கடும் மோதல் இடம்பெற்றுள்ளது. இதில் 20 க்கும் மேற்பட்டவர்கள் காயமடைந்திருப்பதாக மற்றுமொரு தகவல் கூறுகின்றது. நீதின்றத்தின் தீர்பு சட்டவிரோதமானது என்று கோஷமெழுப்பிய பாதிக்கப்பட்டவர்களின் குடும்ப உறுப்பினர்கள், முபாரக்கிற்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளனர். இது தவிர, நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து தலைநகர் கெய்ரோ, அலக்சாந்திரா, சுயஸ் போன்ற இடங்களில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றன.

இந்த பதற்றமான சூழ்நிலையைத் தொடர்ந்து முன்னாள் ஆட்சியாளர் ஹ_ஸ்னி முபாரக் கெய்ரோ சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டார். வழக்கு விசாரணைக்கு முன்னரும், நீதிமன்றத்திற்கு முன் முபார்க்கிற்கு எதிரானவர்கள் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

எகிப்தில் அடுத்த ஜனாதிபதியைத் தெரிவு செய்வதற்கு மக்கள் தயாராகி வரும் நிலையில், இந்த தீர்மானமிக்க நீதிமன்ற தீர்ப்பு வெளியாகியிருக்கின்றது. எதிர்வரும் 16 ஆம், 17 ஆம் திகதிகளில் நடைபெறவுள்ள இரண்டாம் கட்ட ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம் சகோதரத்துவ அமைப்பின் வேட்பாளர் முஹம்மத் முர்சியும், முன்னாள் பிரதமர் அஹமத் ஷாபியும் போட்டியிடுகின்றனர். 

No comments: