Saturday, September 3, 2011

நடுக்கம் துயரின் தொடக்கம்.


ஒவ்வொரு மனிதனும் தனக்கு நல்லதே நடக்க வேண்டும் என்று சிந்திக்கின்றான். நல்லதையே நாடுகின்றான். அழகை ரசிக்கின்றான். அசிங்கத்தை வெறுக்கின்றான். சந்தோஷத்தை சந்திக்க நினைக்கும் மனசு கவலையை தாங்கிக் கொள்ள தயங்குகிறது. 

வாழ்க்கையின் அனைத்து விடயங்களும் நல்லது கெட்டது என்ற இரண்டு முனைகளுடன் பினைந்த ஓர் பாலம். இரண்டும் பிரிந்து தனித்தணியாக இயங்க முடியாது. சந்தோஷம் இருந்தால்தான் கவலையின் யதார்த்தம் புரியும். அதேபோல் கவலையிருந்தால்தான் சந்தோஷத்தின் மகிமை தெரியும்.

இன்று நம்மில் பலர் மனசுக்கு நிம்மதி இல்லையே என்று ஏங்கி ஏங்கியே மன நோயாளியாகி விடுகின்றனர். குளிர்கின்றது என்பதற்காக சுருண்டுகொண்டு படுத்திருப்பது மாத்திரமா அதற்கு தீர்வு? நாம் துவண்டு போவதால் நம்முடன் யுத்தம் செய்யும் அந்தக் கவலைதான் ஜெயிக்கின்றது. என்னால் முடியும் என்று சிந்தித்து எதையும் தாங்கும் இதயம் இருந்தால் அது கவலையைக் கொளுத்தும் சுடலையாகும். தணல்கூட பூம்புனலாய் காட்சியளிக்கும். கலங்காதே மனிதா! குழம்பாதே! உன் நடுக்கம் துயரின் தொடக்கம்.

இந்த அறிவுரைக்கு அரிச்சுவடி கவியரசு கண்ணதாசன்தான்.

வாழ்க்கையென்றால் ஆயிரம் இருக்கும்..
வாசல் தோறும் வேதனை இருக்கும்..
வந்த துன்பம் எது வந்தாலும்
வாடி நின்றால் ஓடுவதில்லை
எதையும் தாங்கும் இதயம் இருந்தால்
இறுதி வரைக்கும் அமைதி இருக்கும்.

..................நடக்கும் பொழுதில் அமைதியைத் தேடு
உனக்கும் கீழே உள்ளவர் கோடி
நினைத்துப் பார்த்து நிம்மதி நாடு......

சுமைதாங்கி திரைப்படத்தில் கண்ணதாசனின் வரிகளில் பி.பீ ஸ்ரீனிவாஸ் பாடிய இந்தப் பாடல் சோர்ந்துபோன இதயங்களைச் சுண்டி நல்லதோர் உதயத்திற்காய் உத்வேகமளிக்கிறது. இந்த ரத்திணத் தத்துவம் ராகமாய் ஒலிப்பதால் ரத்தத்தின் துடிப்பு துரிதமாகிறது. 

No comments: