Friday, September 9, 2011

சிதைந்த ஓவியம் - தொடர் 03

         தங்கத்தில் குளித்து வந்த கதிரவனின் மென் கதிர்கள் ஜன்னல் வழியாய் தெறித்து அகல்யாவின் முகத்தை சூடேற்றியது. முற்றத்து மாமரத்தில் வந்தமர்ந்த காகங்கள் ஏதேதோ கதைபேசி கரைந்தன. மதுரக் கனவுகளில் நீந்திக் கொண்டிருந்த அகல்யாவைத் தட்டி எழுப்பினாள் அவளது அம்மா.

ஏய்..அகல்யா! மணி ஏழாயிட்டுது. இன்னும் என்ன நித்திரை. எழும்பு! கொமருப் புள்ளைகள் இப்படியா படுக்கிறது. சரண்..தம்பி! எழும்புடா..டியூஷன் போகனும். ரெண்டு பேரும் வந்து டீயக் குடிங்க.

ஒன்பது மணிக்கு மதன் வரச் சொன்னாரே. நேரம் சென்றா அவரு வந்து திரும்பிப் போயிடுவாரோ. அவர சந்திக்கிற முதல் சந்தர்ப்பம். இன்னக்கே நான் லேட்டாயிட்டா அவரு என்னப்பத்தி என்ன நெனப்பாரு.

சட்டென கட்டிலில் இருந்து எழும்பி மேசையில் வைத்திருந்த கூஜாவிலிருந்து கொஞ்சம் தண்ணீரை வாய்க்குள் எடுத்து ஜன்னல் வழியாய் கொப்பளித்தாள். அடுக்குச் சல்லடையில் இருந்த துவாயை எடுத்துக் கொண்டு குளியலறைக்குள் நுளைந்தவள் அங்கிருந்த கண்ணாடியில் தன் முகத்தைப் பார்த்தாள். தூக்கத்தில் வதங்கிப் போயிருந்த தன் முகத்திற்கு இன்று எப்படியாவது புதுப்பொலிவை கொடுக்க வேண்டும் என எண்ணியவள் ஆடை மாற்றி சவரைத் திறந்து விட்டாள்.

ஒவ்வொரு சொட்டு நீரும் தன்; மேனியில் சங்கமித்து இன்ப உணர்வை ஊர வைத்தது. மதன் பற்றிய நினைவுகளுடன் நனைந்த அவளது உடம்பின் குளிர் இரட்டிப்பானது. இதுவரை காலமும் தனது கட்டுப்பாட்டில் இருந்த அங்கங்களைக் கூட தேய்த்துக் குளிப்பதற்கு அவள் தயங்கினாள். மேனியைத் தடவி வழிந்தோடும் நீர்த்துளிகள் கூட அவற்றின் வரையைறயை மீறி செயற்படுகின்றதோ என்று அவளுக்கு நினைக்கத் தோன்றியது. தனது ஒட்டு மொத்த உடம்புக்கும் சொந்தக்காரன் மதன் மட்டும்தான் என அவள் நினைத்தாள். நீர் படும் இடமெல்லாம் மதன் தொடும் உணர்வில் குளித்துக் கொண்டிருந்த அகல்யா அவளை அறியாமலே பாடல் மூலம் தன் உணர்வை வெளிப்படுத்தினாள்.

தினம் நீ குளித்ததும் எனைத் தேடி
என் சேலை நுனியால் தலைத் துடைப்பாயே
அது கவிதை..

திருடன் போல் பதுங்கியே திடீர் என்று
பின்னால் இருந்து எனை நீ அனைப்பாயே அது கவிதை
யாரேனும் மணி கேட்டால்
அதை சொல்லக் கூடத் தெரியாதே
காதலெனும் முடிவினிலே
கடிகார நேரம் கிடையாதே

வசீகரா! என் நெஞ்சினிக்க
உன் பொன் மடியில்
தூங்கினால் போதும்...அதே கனம்
என் கண்ணுரங்க முன்
ஜென்மங்களின் ஏக்கங்கள் தீரும்.
நான் நேசிப்பதும் சுவாசிப்பதும்
உன் தயவால் தானே..
ஏங்குகிறேன்..ஏங்குகிறேன் உன் நினைவால் நானே..நான்.

சவரில் இருந்து சிந்திய நீர் அவளின் பாட்டுக்கு இசையமைத்தது. மதனைத் தவிர எதையுமே சிந்திக்காமல் கலர் கலராய் கற்பனை வளர்த்து சஞ்சரித்துக் கொண்டிருந்த அவளை அவளது தம்பியின் குரல் தடை செய்தது.
அக்கா! அவசரமா வெளியே வா..நா டியுஷன் போகனும்..

ச்சே.. அஞ்சு நிமிஷம் இருடா..வந்துடறன்.. இவனொரு சனியன்.

குளியலை சுறுக்கிக் கொண்ட அகல்யா தனது நீண்ட துவாயினாள் கூந்தலை  துடைத்துக் கொண்டு அந்த துவாயினால் தன் மேனியை மூடிக் கொண்டு ஆடையை மாற்றிக் கொண்டாள். குளியலறைக் கட்டில் இருந்த பற்பசையை எடுத்து தூரிகையில் இட்டு பற்களை துளக்கினாள். கண்ணாடியில் முகம் பார்த்து சிரித்தவள் தனக்குள்ளேயே..

ஹேய்.. அகல்யா மதன மயக்குறதுக்கு இந்த அழகு போதாதுடி. ம்.. ஏதாவது செய்..

என தனக்குள் பேசியவள், பக்கத்திலிருந்த கரட் பேஷியல் வொஷ்ஷை முகத்தில் தடவி ஒவ்வொரு இடத்தையும் அணு அணுவாய் கவனித்து தேய்த்தாள். முகத்திற்கு தண்ணீர் ஊற்றி நுரையை அகற்றிக் கொண்ட அவள் முகத்தைத் துடைத்த வண்ணம் குளியலறையை விட்டு வெளியே வந்தாள்.

ட்ரீங்..ட்ரீங்... அகல்யாவின் தொலைபேசி மணி ஒலித்தது. மதனாக இருக்குமோ..? என எண்ணியவள் பதிலளிப்பதற்காய் தனது அறைக்குள் சென்றாள். ஆனால் அவளுக்கு முன்பே அவளது அம்மா தொலைபேசியை கையில் எடுத்து விட்டாள்.

அய்யோ..நான் மாட்டிடுவனோ..கடவுளே என்னக் காப்பாத்து என வேண்டிக் கொண்டவள் அம்மா முகத்தின் பிரதிபலிப்பையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

யாரு.. விலங்கல..ஆ அப்படியா? நான் அவட அம்மா. சரி இருங்க. கொடுக்கிறன். அகல்யாவிடம் தொலைபேசியை நீட்டினாள் அம்மா.

அம்மா இருக்கிற இடத்தில எப்படி மதனோட கதக்கிறது. என்ன பன்னுரது? சரி..அப்படி அவரா இருந்தால் சூழ்நிலையை சமாளிக்க வேண்டியதுதான். சீ..அப்படி கதக்கிற நேரம் மதன் கோவிச்சுக் கொண்டா..கூடாது என நினைத்தவளாய் தொலைபேசியை எடுத்து திரையில் யாருடைய இலக்கம் எனக் கவணித்தாள். தெரியாத இலக்கமாக இருக்கிறதே.. யாரா இருக்கும். மதன் வேறு இலக்கத்தில இருந்து தொடர்பு கொள்றாரோ.. என தனக்குள்ளேயே வினாத் தொடுத்த அவள் பதிலளித்தாள்.

ஹலோ! யாரு..திலீபனா? ஆ. சொல்லுங்க..எப்படி சுகமா இருக்கிறீங்களா?

உயர்தரம் படிக்கும் போது தன்னுடன் கூடப் படித்த ஒரு நன்பன்தான் அழைப்பில். பாடசாலை காலத்தில் அகல்யாவிடம் விருப்பம் கேட்டுத் தோற்றுப் போனவன். பல வழிகளிலும் அவளை காதலிப்பதற்காய் முயற்சித்தும் அவனாள் முடியவில்லை. வகுப்பு மாணவன் என்பதால் அவனைக் காதலிக்கும் படி அகல்யாவின் தோழிகள் அவன் சார்பாக பரிந்து பேசியிருந்தார்கள். ஆனால், படிக்க வேண்டும் என்ற முனைப்பில் இருந்ததால், அகல்யா அவனின் காதலை ஏற்றுக் கொள்ளவில்லை.

உயர்தரத்தில் உயிரியல் விஞ்ஞானப் பிரிவில் அகல்யாவுடன் படித்தவன்தான் திலீபன். தற்போது கொழும்புப் பல்கலைக்கழகத்தில் பட்டத்தை முடித்துக் கொண்டு கொழும்பு தேசிய வைத்திய சாலையில் பயிலுனர் வைத்தியராக இருக்கிறான். திலகாவிடமிருந்து அகல்யாவின் இலக்கத்தைப் பெற்று அவன் தொடர்பு கொண்டிருந்தான்.

நான் சுகம்..நீங்க எப்படி அகல்யா? என்னோட இப்பவும் கோவமா?

ச்சே.. அப்படியெல்லாம் ஒன்னும் இல்ல.

அப்ப ஏன் என்ன இக்னோர் பன்னுரீங்க. அகல்யா! இப்பகூட ஒன்னும் குறைஞ்சு போகல. நான் இன்னும் ஒரு வருஷத்தில டொக்டர். அப்புறம் வாழ்க்கையில செட்லாகலாம்னு நினக்கிறன். நீங்க விரும்பினா நான் உங்கள கலியாணம் பன்னிக்க ரெடி..

திலீபன்..அப்ப சொன்னதத்தான் இப்பவும் சொல்றன். என்னால முடியாது. கம்பல் பன்ன வேணாம்.

ஏன் முடியாதுன்னு சொல்லுறீங்க..என்னுல என்ன குறை..

அது எனக்குத் தெரியாது.. நாங்க தொடர்ந்தும் க்லாஸ்மேட்டாவே இருப்பம். அதுதான் சரி..

அகல்யா. நீங்க அவசரப்பட வேண்டியதில்ல. நிதானமா யோசிச்சு பதில் சொல்லுங்க. நான் வக்கிறன்.

மதனை சந்திக்கும் களிப்புடன் இருந்த அகல்யாவின் முகம் சிவந்தது. திலீபனின் வார்த்தைகளுக்கு பதிலளிக்காமல் தொலைபேசித் தொடர்பைத் துண்டித்தாள். அவளையே உற்று நோக்கிக் கொண்டிருந்த அம்மா, அகல்யாவிடம் அழைத்தவர் யார் என விழிகளால் பதில் கேட்டாள்.

தொடரும்.....


No comments: