Friday, August 19, 2011

அல்லாஹ்வை வணங்கிக் கேட்போம்...


சோதனைகளின் நெருக்கடி தீவிரமடையும் போதுதான் நாம் இறைவனை நினைக்கின்றோம். அது கொஞ்சம் விஞ்சிப் போய் விட்டால் இறைவனின் நாட்டத்திலேயே நாம் குறைபிடிக்க ஆரம்பித்து விடுகின்றோம். இந்த தவறை நாம் எல்லோருமே செய்கின்றோம்.


சந்தோஷமாக இருக்கும் போது நாம் இறைவனைப் பற்றி சிந்திப்பதில்லை; வணங்குவதில்லை; அவனின் கட்டளைகளை சரியாகப் பின்பற்றுவதில்லை. ஏதாவது கஸ்டம் அல்லது கவலை தரும் சம்பவங்கள் நேர்ந்து விட்டால் அழுது புலம்புகின்றோம். இறைவனிடம் கேட்க விளைகின்றோம். தொழுகின்றோம்; துஆ இறைஞ்சுகின்றோம்; எமது தேவையை நிறைவேற்றிக் கொள்வதற்காக. இறைவனை திருப்திப்படுத்துவதற்காக அல்ல..நமது தேவை நிறைவேறி திருப்தி காண்பதற்காகத்தான் இதை நாம் செய்கின்றோம். நாம் எவ்வளவு சுயநலவாதிகள் பாருங்கள். எந்தத் தேவையுமற்றவனாகிய இறைவனுக்கு நமது தேவையை நிறைவேற்றுவது அவ்வளவு பெரிய காரியமல்ல. அவன் சர்வ சக்தன். வல்லமை படைத்தவன்.

ஆனால் மனிதன் கேட்கும் நாடும் தேவைகளை திருப்தியை வழங்குவதற்கு முன்னர் இறைவன் அவனின் மனோநிலையை பார்க்கின்றான். இறைவனுக்கு பிடிக்காதது இறைவனிடம் நாம் கேட்பது கிடைக்குமா இல்லையா என்பது குறித்து சந்தேகப்படுவதாகும் என்று நான் கடந்த வார ஜூம்ஆப் பிரசங்கத்தில் கேட்டேன். இவ்வாறு சந்தேகப்பட்ட பனு இஸ்ரவேலர்களின் ஒரு கூட்டத்தாரை இறை மறுப்புக் கொள்கையுடையவர்களாக இறைவன் மரணிக்கச் செய்தானாம்.

உண்மையில், இறைவன் பேருபகாரிதான். அளவற்ற அருலாளன். நிகரற்ற அன்புடையவன். எவ்வளவுதான் எட்டி உதைத்தாலும், தாய்க்கு தன் பிள்ளை பொன் குஞ்சுதான். இந்தப் பாசப் பிணைப்பையும் விட எழுபது மடங்கு இறக்கமுள்ள இறைவன் நாம் தெரிந்தோ, தெரியாமலோ செய்யும் பாவங்களை மன்னிக்கக் கூடியவன். கருணை காட்டுபவன். ஆனால், அவன் மீது சந்தேகப்படுவோரையும். இணை வைப்போரையும் அவன் வெறுக்கின்றான்.

மனிதன் தப்பு செய்யலாம். ஆனால் தான் செய்த தவறை உணரந்;து இறைவனிடம் மன்னிப்புக் கோர வேண்டும். நாம் அவனின் அடிமைகள். அவனின் கட்டளைகளை நிறைவேற்றுவதற்காகவே நாம் படைக்கப்பட்டுள்ளோம். அப்படியிருக்க அவனுக்கு மாறு செய்து விட்டு அவனிடம் மன்னிப்பும் கோராமல், அவன் மீது சந்தேகப்படுவது எமது நன்றியில்லாத் தனத்தையும், கீழ்த்தரத்தையும் காட்டும்.

இறையச்சத்துடன், நாம் கேட்கும் பிரார்த்தனைகளை இறைவன் ஏற்றுக் கொள்வான். நம்பிக்கையுடன் கேட்க வேண்டும்.

எனக்குள் எப்போதும் ஒரு கேள்வி எழும்புகின்றது. எண்ணிலடங்கா பாவங்களை செய்து கொண்டிருக்கும் எமது இருட்டு உள்ளத்திற்கு ஈமானிய ஒளி கிடைக்க வாய்;ப்புண்டா என்பதுதான் எனது கேள்வி...

ஒவ்வொரு நாளும் கணிணியில் தேவையற்ற வைரஸ் தொற்றுவதுபோல எமது ஐம்புலன்களில் ஏதாவது ஒன்று ஒரு பாவத்தை செய்தே தீருகின்றது. ஒரு பாவம்; செய்தால்;, இதயத்தில் ஒரு கரும்புள்ளி ஏற்படுகின்றது. எனது இதயம் கண்ணங் கருப்பாக இருக்குமோ என்று சந்தேகம் கொள்ள வைக்கின்றது.

இவ்வாறான நிலையில் நான் சந்திக்கும் சோதனைகள், நெருக்கடிகளை தீர்த்து வைக்குமாறு இறைவனிடம் கேட்பதற்கும் வெட்கமாக இருக்கிறது. நாம் அவனுக்காக செய்தது ஒன்றுமில்லை. நாம் சுவாசிக்கும் காற்றிலிருந்து அனைத்துமே அவன் எங்களுக்கு தந்த அருட் கொடைகள். இதையெல்லாம் மறந்து விட்டு அவனுக்கு மாறு செய்வது மாத்;திரமல்லாமல் பாவத்திலும் ஈடுபடுகின்றோம்.

இருந்து நின்று தொழுகின்றோம்..ஆனால் தொழுகையிலும் இறையச்சம் இல்லை. தொழத் தக்பீர் கட்டிவிட்டால் உலக நினைப்புக்கள் தான்.. இறைவனுடன் தொடர்பை ஏற்படுத்தும் தொடர்பாடல்தான் தொழுகை..அதிலும் நாம் அசட்டை செய்கின்றோம். தொழும்போது ஓரளவு இறைவனை நினைத்தாலும், பள்ளியை விட்டு வெளியே வந்தவுடன் அதை மறந்து விடுகின்றோம்.

இறைவா! நல்லவற்றின் பால் ஈர்க்கப்படுவதானாலும் தீயவைகளிலிருந்து விலகிக் கொள்வதானாலும் உன் நாட்டம் தேவை.. அதை எனக்கு கொடு..

உன் மீதான் நம்பிக்கையுடன் அச்சத்துடன் வாழத் துணை செய்..

உனது அடிமை என்ற உணர்வுடன் வாழ்ந்து எஜமானாகிய உனக்குரிய பொறுப்புக்களை நிறைவேற்றும் அடியானாக என்னை மாற்று...

எனது உள்ளத்தின் இருளைப் போக்கி ஈமானின் வெளிச்சத்தைத் தா..

இந்த மேலான ரஹ்மத் மிக்க றமழான் மாதத்தின் கிருபையால் எனது பாவத்தை மன்னித்துக் கொள்...

இந்த உலகத்திலும் மறு உலகத்திலும் நல்லதைத் தந்து நரகின் வேதனைகளிலிருந்து காப்பாற்று..

அருட்கொடையாளர்களுக்கெல்லாம் அருளாலன் நீ.. உன் அருளில் எம்மையும் சேர்த்துக் கொள்வாயாக!

நற்காரியங்களைச் செய்து நல்ல மனிதர்களாக வாழத் துணைபுரி!

உன்னை மறுப்பவர்களின் கூட்டத்திலிருந்தும் வறுமை கப்று நரகம் என்பவற்றின் வேதனை மற்றும் சோதனைகளிலிருந்தும் எம்மை காப்பாற்று!

எம்மால் கேட்கத்தான் முடியும்..வழங்கும் ஆற்றலும் வல்லமையும் நாட்டமும் உனக்கே..
நாம் உன் அடிமைகள்.. உனை கெஞ்சுகின்றோம் எமது பிழைகளைப் மன்னித்து எம்மீது உன் கருணையை செலுத்து...

றமழான் மாத்தின் கிருபையாலும், தூதர் முகம்மத் ஸல்லல்லாஹ_ அலைஹி வஸல்லம் அவர்களின் பொருட்டாலும் உனது தனிப் பெரும் மேலான கருனையாலும் எமது இந்த துஆவை ஏற்றுக் கொள்வாயாக..

ஆமீன்..யாரப்பல் ஆலமீன்..

No comments: