மத்தியஸ்த நிலையில் இருந்து கொண்டு உண்மையான தகவல்களை அறிக்கையிட்டு மக்களுக்கு தெளிவுபடுத்தும் பொறுப்பு ஊடகங்களுக்கு உண்டு. அரசியல் கட்சிகள் மத்தியில் கொள்கை வித்தியாசங்கள் இருக்கலாம். அதற்கு சார்பாக ஊடகங்களும் இயங்கலாம். அதை மக்கள் விளங்கி வைத்திருக்கின்றார்கள்.
அரச சார்பான ஊடகங்கள் எப்போதும் அரசாங்கத்திற்கு சார்பாகவே குரலெழுப்புகின்றன. எதிர்கட்சிக்கு சார்பானவை அந்தந்தக் கட்சிகளுக்காக செயற்படுகின்றன. இன ரீதியாகவும் சில ஊடகங்கள் செயற்படுகின்றன. இது அனைத்து நாடுகளிலும் கவனிக்கக் கூடிய ஒரு பொதுவான விடயம்தான்.
ஆனால் நேரத்திற்கு நேரம் தமது நிலைப்பாட்டில் சாயம்பூசிக் கொண்டு தமக்கு எதிராக குரல் எழுப்பியவர்கள் மீது கோபத்தையும் ஆத்திரத்தையும் கொட்டும் ஊடகங்களும் இருக்கத்தான் செய்கின்றன. நேற்றிரவு மகாராஜா ஊடக நிறுவனத்தின் செய்திகளைப் பார்த்தேன்.
அந்த ஊடகம் எதிர்க்கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவை வெட்கம்கெட்ட தலைவர் என்றும் பாராளுமன்ற உறுப்பினர் மங்கல சமரவீரவை கேவேறுக் கழுதை ஒப்பந்தக்காரர் என்றும் விமர்சித்து செய்தி வெளியிட்டது. ஊடகத்திற்கென ஒரு தர்மம் உண்டு. தகாத வார்த்தைகளை இவ்விரண்டு தலைவர்களும் வெளியிட்டார்கள் என திரை அறிவிப்புச் செய்த சிரச மற்றும் சக்தி தொலைக்காட்சி அலைவரிசைகள் இவ்விரு தலைவர்கள் பற்றியும் தகாத சொல்லடுக்களை பிரயோகிப்பது எந்த விதத்தில் நியாயம்? ஊடகம் என்பதற்காக நாம் விரும்யிதை செய்து விட முடியாது. உண்மையைத்தான் சொல்ல வேண்டும். குறிப்பிட்ட தலைவர்கள் சிரச ஊடகத்தை சாடினார்கள் என்பதற்காக பதிலுக்கு ஊடகமும் அவ்வாறு நடந்து கொள்வது அற்பமான பலிவாங்கும் சேறுபூசும் நடவடிக்கையை அல்லவா காட்டுகின்றது.
ரணிலுக்கு வக்காளத்து வாங்கி செய்தி வெளியிட்டவர்கள் இன்று சஜித்துக்கு வக்காளத்து வாங்குவதேன்? ஒரு காலத்தில் விமல் வீரவன்சவுக்கு எதிராக தொடர்ந்தும் இந்த ஊடகம் செயற்பட்டு வந்தது. பின்னர், மேர்வின் சில்வா. இப்படி மகாராஜா நிறுவனத்திற்கு எதிராக குரலெழுப்புபவர்களுக்கு எதிராக அந்த நிறுவனத்திற்கு சொந்தமான ஊடகங்ளும் செயற்படுகின்றன. ஏதோ அடிக்கடி தம்மைப் புகழந்து கொள்கின்றார்கள். நாம் மக்கள் ஊடகம். தெரிவிப்பது நாம்.. தீர்மானிப்பது நீங்கள் என்று.
உண்மையைச் சொல்லப் போனால் இவர்களே தீர்மானித்து இவர்ளே சொல்கின்றார்கள். அங்கு மக்களின் தீர்ப்பிற்கு இடமில்லை. தமக்கு கிடைத்த தகவல்களை அந்த ஊடகங்கள் வெளியிடலாம். அது அந்த ஊடகத்திற்கு சார்பானதாக இருக்கலாம் அல்லது எதிராக இருக்கலாம். அதை தீர்மானிக்க வேண்டியது மக்கள். ஆனால், நடப்பது என்ன? அவர்களே வரைகின்றார்கள். நிறமும் தீட்டுகின்றார்கள். ஓவியத்தைத்தான் நாம் பார்க்கின்றோம்.
மறுபுறத்தில், கட்சியை சீர்குலைத்து அதில் லாபம் பெற யோசிக்கும் தலைவர்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள். என்னைப் பொறுத்தவரை சஜித் பிரேமதாசவும் அப்படிப்பட்டவர்தான். கட்சிக்குள் முரண்பாடு இருந்தால் அல்லது கட்சிக்கு எதிராக ஏதாவது கூற்றுக்கள் முன்வைக்கப்பட்டால் அதை கட்சியுடன் ஆலோசித்து சம்பந்தப்பட்ட பிரச்சனையை தமக்குள்ளேயே தீர்த்துக் கொண்டு கட்சியை பாதுகாத்திருக்க வேண்டும். ஆனால், பாராளுமன்ற உறுப்பினர் சஜித் பிரேமதாச என்ன செய்கின்றார்? ரணிலுக்கு எதிரான கருத்துக்களை முன்வைத்து கட்சியின் சிம்மாசனத்தை பரிக்க முயல்கின்றார். கட்சி எப்படிப் போனாலும் அவருக்கு பரவாயில்லை. தனது நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றார். இது இரு கட்சித் தலைவர்களுக்கு இடையிலான கருத்தியல் போட்டி நிலையாக இருக்கலாம்.
ஆனால், எதிர்க்கட்சிக்கு சார்பாக அதிலும் குறிப்பாக ஐக்கிய தேசியக் கட்சிக்கு முன்னுரிமை அளித்து செயற்பட்டு வந்த சிரச ஊடகமே அந்தக் கட்சியை சீர்குலைக்க முயல்வதை இந்த நாட்களில் அந்த ஊடகம் வெளியிடும் செய்திகள் சித்தரிக்கின்றன. குறிப்பாக தமது ஆத்திரத்தைக் கொட்டித் தீர்ப்பதற்காக செய்திகளை சேகரிக்கின்றார்கள். ஊடக தர்மத்திற்கும் மேலாக அந்த ஊடகம்; நாடக தர்மத்தை சரியாக கடைபிடிக்கின்றார்கள். நாளுக்கு நாள் தம்மீது வித்தியாசமான சாயத்தைப் பூசிக் கொள்கின்றன.
மகாராஜா ஊடகத்தின் நிலைப்பாடும், போக்கும் ஏனைய ஊடகங்களுக்கு முன்மாதிரியாக இருக்கக் கூடாது. ஊடகம் என்பது கிடைக்கும் செய்திகளையும், அந்த செய்தி அடையும் இடத்தையும் இணைக்கும் பாலமாக இருக்க வேண்டும். வேறு எந்தத் தொழில்பாட்டையும் அது செய்யக் கூடாது. மக்களுக்கு விளங்கக்கூடிய வகையில் சொற்களையோ, அல்லது கட்டமைப்பையோ வித்தியாசப்படுத்தலாம். ஆனால், உள்ளடக்கம் எப்போதும் திரிவுபடாமல் இருக்க வேண்டும். உள்ளடக்கத்திற்கு அர்த்தம் கொடுப்பவர்களாக மக்களாக இருக்க வேண்டும். அந்த அதிகாரத்தை ஊடகம் எடுக்கக் கூடாது. மேலும், ஊடகத்திற்கு சமூகத்தில் சமாதானம், ஐக்கியம், சமத்துவம் என்பவற்றை ஏற்படுத்தும் சமூப் பொறுப்பும் இருக்க வேண்டும்.
இதையொல்லாம் கடந்து, தமது தாளத்தில் மக்கள் ஆட வேண்டும் என நினைக்கின்றது சிரச மற்றும் சக்தி ஊடககங்கள்...
வாசகர்களே.! இது தொடர்பான உங்களின் கருத்துக்களை இங்கே பதித்திடுங்கள்.

No comments:
Post a Comment