Tuesday, August 2, 2011

சாம்பல் பூத்த தணல்

மர்மமான முறையில் சடலமாக கண்டெடுக்கப்பட்ட பட்டாணி ராசிக்
என்பவரின் கடத்தலுடன் சம்பந்தமான பல தகவல்களை 2010 டிசம்பர் 12 ஆம் திகதி சிங்கள பத்திரிகையான லங்காகட்டுரையாக வெளியிட்டிருந்தது. அதன் தமிழாக்கம் வாசகர்களுக்காக இங்கு மீள் பிரசுரம்செய்யப்படுகின்றது.


மூல கட்டுரையாளர் : ஜனக விஜேகுணதிலக

அமைச்சரின் கையாள் இரண்டு கோடி ரூபா கப்பமொன்றுக்காக ராசிக்கை கொலை செய்தானா?

கோனவல சுனில், சொத்தி உபாலி, பெத்தகான சஞ்சீவ, நாவல நிஹால், பாமன்கட அசோக, பொட்ட நவுபர், பீன்ஸ் கொலம், தார அஜித் என்ற பெயர்களை இலங்கையில்எவரும் அறிவர். இவர்கள் பாரிய  குற்றமிழைத்தோராகவும் பாதாள உலக ஜாம்பவான்களாகவும் இலங்கை வரலாற்றில் பெயர் பெற்றுள்ளனர். இவர்களின் பெயர்களுக்கு முன்னால் குறிப்பிடப்படுவதெல்லாம் கொலை, கடத்தல், கப்பம்  கோருதல், போதை வஸ்து வியாபாரம் போன்றவையாகும். தற்காலத்திலும் இவர்கள் மேற்கொண்ட காரியங்களை அவ்வாறே பின்தொடரும் பாதாள உலகக் கும்பல் உள்ளது. எனினும் இன்று வரை பாதாள உலகைக் கட்டுப்படுத்தி வருவதாக அரசாங்கம் கூறுகிறது. வெள்ளை வேனில் ஒவ்வொருவராக கடத்திச் சென்று காணாமலாக்கினாலும் பாதாள உலக சம்பங்கள் முன்னரை விட கடுமையாக நாடு முழுவதும்  நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இதில் மாற்றம் என்னவென்றால், அன்று பாதாள கோஷ்டியினருக்கு பதிலாக இன்று நாடாளும் அமைச்சர்களும் அவர்களின் கையாட்களும் இதனை கையிலெடுத்திருப்பது தான்.

கடந்த 2010.02.11 ஆம் திகதி பொலன்னறுவையின் கதுருவெல நகரில் கடத்தல் சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. அது அரச சார்பற்ற நிறுவனமொன்றில் கடமையாற்றிய பட்டாணி ராசிக் எனும் அதிகாரியின் கடத்தலாகும். இரண்டு கோடி ரூபா கப்பம் பெறுவதற்காக நடத்தப்பட்ட இக் கடத்தல் தொடர்பான விசாரணைகள் அரசியல் அதிகாரத்தினால் அமுக்கப்பட்டுள்ளன. கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் அவர்களுடைய பெயர் இச்சம்பவத்துடன் தொடர்புபட்டிருக்கின்றமை இவ்வாறு அமுக்கப்படுவதற்குக் காரணமாகியிருக்கின்றது.

கடத்தப்பட்டுள்ள பட்டாணி ராசிக் என்பவர் சமூக நம்பிக்கை நிதியத்தின் முகாமையாளர் ஆவார். இவர் ஓய்வு பெற்ற கிராம அதிகாரியும் ஆவார்.பொலன்னறுவையில் நடைபெறும் தனது அரச சார்பற்ற நிருவனத்தின் கூட்டமொன்றில் கலந்துகொள்வதற்காக, 2010.02.11 ஆம் திகதி காலை 5:00 மணிக்கு சமீரகமை (முந்தல் பிரதேச செயலக பிரிவு) தனது வீட்டிலிருந்து வெளியேறியிருக்கின்றார். அதே நாள் பொலன்னறுவை, கதுருவெல நகரில் வைத்து கடத்தப்பட்டுள்ள இவர் தொடர்பான எந்தவித தகவலும் இன்று வரையில் இல்லை. காணாமல் போனது தொடர்பாக 2010.02.13 ஆம் திகதி முந்தல் பொலிஸ் நிலையத்தில் C.I.B (II)33175 எனும் இலக்கத்திலும் 2010.02.14 ஆம் திகதி பொலன்னறுவை பொலிசில் M.O.I.B. 113110 எனும் இலக்கத்திலும் மற்றும் 2010.02.15 ஆம் திகதி C.I.B.1. 389187 எனும் இலக்கத்திலும் முறைப்பாடுகள் பதியப்பட்டுள்ளன.

கடத்தப்பட்டதன் பின்னர், இவரது வீட்டுக்கு தொலைபேசி அழைப்பொன்றை எடுத்த ஒருவர், பட்டாணி ராசிக்கை விடுவிக்க  வேண்டுமென்றால் இரண்டு கோடி ரூபா கப்பம் தர வேண்டுமெனக் கூறியுள்ளார். 2010.02.23 ஆம் திகதி பட்டாணி ராசிக் உடைய கையடக்கத் தொலைபேசியை உபயோகித்து அழைப்பொன்றை எடுத்த ஒருவர் இரண்டு கோடி ரூபா கப்பத்தை உடன் தர வேண்டுமென மிரட்டியுள்ளார். இவ்வாறு கப்பம் கோரி தொடர்ந்தும் மிரட்டல்களும் எச்சரிக்கைகளும் விடுப்போரிடம் ராசிக்கைப் பற்றி எவ்வாறு தெரிந்துகொண்டீர்கள் எனக் கேட்ட போது கொழும்புக்கு வருமாறு கூறியுள்ளனர். 2010.04.04 ஆம் திகதி ராசிக் உடைய மருமகன் (மகளின் கணவர்) அசாம் கொழும்புக்கு சென்ற போது குணசிங்கபுரவுக்கு வருமாறு தொலைபேசி அழைப்பு வந்துள்ளது. குணசிங்கபுர சென்றபின் தொலைபேசியில் தொடர்பு கொண்ட ஒருவர் குணசிங்கபுரம் முஸ்லிம் பள்ளிவாசலில் உள்ள கருப்பு நிற விரிப்பின் கீழ் பார்சல் ஒன்று  வைக்கப்பட்டுள்ளதாகவும் அதனை எடுத்துப் பார்க்குமாறும் கூறியுள்ளார். பார்சலை பிரித்து பார்த்த போது அதன் உள்ளே ராசிக் உடைய மூக்குக் கண்ணாடி, சாரதி அனுமதிப் பத்திரம், கைக்கடிகாரம், கிராம அதிகாரி அடையாள அட்டை மற்றும் மோட்டார் சைக்கிளின்
ஆவணங்களும் இருந்துள்ளன.

இவை அனைத்தையும் மருமகன் உட்பட உறவினர்கள் முந்தல் பொலிஸ் நிலையத்திடம் ஒப்படைத்துள்ளனர். அதன் பின்னரும் கப்பம் கோருவோர் 0777-004072, 0777-709576, 075-8717571, 075-8012113 ஆகிய தொலைபேசி இலக்கங்களிலிருந்து கப்பம் கேட்டு மிரட்டியுள்ளனர். இது தொடர்பாக புத்தளம் பிரதி பொலிஸ் அத்தியட்சகர் திரு. சுகதபால அவர்களின் பணிப்பின் பேரில் முந்தல் பொலிசின் பிரதி பொலிஸ் இன்ஸ்பெக்டர் மென்டிஸ், பொலிஸ் சார்ஜன்ட்களான அமித் மற்றும் ரணவீர ஆகிய புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகள் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். புலனாய்வின் போது கப்பம் கோரி மிரட்டல்கள் வந்த சில சிம் கார்ட் இலக்கங்களும் ராசிக் உடைய தேசிய அடையாள அட்டை இலக்கத்திற்குப் பெற்றுக்கொண்டவை என்பது தெரியவந்தது. இத் தொலைபேசி இலக்கங்கள் தொடர்பாக மேலதிக விசாரணைகளின் போது, குறித்த சிம் கார்ட்களை உபயோகித்து தொலைபேசி அழைப்புக்களை எடுத்த கையடக்கத் தொலைபேசி, புத்தளம் பொலிஸ் பிரிவில் இல. 4/4A, நாகவில்லு எனும் முகவரியில் வதியும் சஹாப்தீன் நவ்ஷாத் என்பவருக்குச்  சொந்தமானது என கண்டுபிடிக்கப்பட்டது. இவரது பெயரில் உள்ள தொலைபேசியின் எமி இலக்கம் 352880100917420 ஆகும். புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் மேற்கொண்ட நுணுக்கமான விசாரணைகளின் பலனாக இக் கடத்தலை மேற்கொண்டவர் சஹாப்தீன் நவ்ஷாத் என்பதை உறுதி செய்துகொண்டனர். தகவல்களை உறுதி செய்துகொண்டதன் பின்னர் நவ்ஷாத்தைத் தேடும் வேட்டையை பொலிசார் ஆரம்பித்தனர்.

இச் சம்பவம் தொடர்பாக புத்தளம் நிலைய பொறுப்பதிகாரி B.R. 177/10/P எனும் இலக்கத்தில் புத்தளம் மாஜிஸ்டிரேட் நீதிமன்றத்தில் வழக்கு ஒன்றைத் தாக்கல் செய்து, இது தொடர்பாக இதுவரை திரட்டிய தகவல் அறிக்கையை திமன்றத்தில் சமர்ப்பித்துள்ளார். எனினும் வெற்றிகரமாக இது வரை மேற்கொண்டு வந்த விசாரணைகள் அனைத்தையும் திடீரென நிறுத்த வேண்டிய நிலையொன்று பொலிசுக்கு ஏற்பட்டது. அது மேலிடத்திலிருந்து வந்த அரசியல் அழுத்தமாகும். இதனுடன் இணைந்து இன்னுமொரு விடயமும் நடந்துகொண்டிருந்தது.

சந்தேக நபரான நவ்ஷாத் சட்டத்தரணி ஒருவர் ஊடாக முன் பிணை கோரி விண்ணப்பித்ததாகும். எனினும் முன்பிணை வழங்குவதை புத்தளம் மாஜிஸ்டிரேட் நீதிவான் நிராகரித்து விட்டார். இக் கடத்தல் நடைபெற்ற இடத்திற்கு நவ்ஷாதுடன் அமைச்சர் ரிசாட் பதியுத்தீனுடைய அந்தரங்க செயலாளரும் சகோதரருமான ரியாஜ் பதியுத்தீன், அமைச்சரின் பாதுகாப்புப் பிரிவின் பொலிஸ் அதிகாரி ஒருவர், சாரதி லாஹீர்,
மௌலவி பைரூஸ் மற்றும் முபீன் ஆகியோர் அடங்கிய குழுவொன்றும் சென்றுள்ளது. இவர்கள் இப் பயணத்திற்காக உபயோகித்தது மீள் குடியேற்ற அமைச்சுக்கு சொந்தமான GK 4520 இலக்கம் கொண்ட லேண்ட் குரூசர் வாகனமாகும். இது தொடர்பாக நவ்ஷாத் உடைய முன்பிணை விண்ணப்பத்தின் இல. 14 பகுதியில் உறுதி செய்யப்பட்டுள்ளது. சம்பவதினம் தான் பட்டாணி ராசிக் அவர்களை சந்தித்ததாகவும் நவ்ஷாத் தனது முன்பிணை விண்ணப்பத்தில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். 2010.02.11 அன்று தாங்கள் ஏறாவூர் நோக்கி செல்லும்போது பொலன்னறுவை முஸ்லிம் பள்ளிவாசலில்  தொழுகைக்காக வாகனம் நிறுத்தப்பட்ட போது பட்டாணி ராசிக் அவர்களை தான் சந்தித்து சுமுகமாக
பேசிக்கொண்டதாக விண்ணப்பதாரி கூறுகின்றார்!

இந்தக் கடத்தலில் உள்ள அரசியல் தொடர்பை அவர் சமர்பித்துள்ள பிணை விண்ணப்பத்தின் 29, 30 ஆம் பந்திகளில் தெளிவாகக் குறிப்பிட்டுள்ளார். திருமணமாகி மூன்று குழந்தைகளின் தந்தையான இவ் விண்ணப்பதாரி கூறுவதாவது பாலாவி எருக்கலம்பிட்டியில் வசிக்கும் நான் மக்கள் மத்தியில் ஆளும் கட்சியின் ஆதரவாளராக பிரபல்யம் அடைந்துள்ள ஒருவன். இச் சம்பவம் தொடர்பாக நான் கைது செய்யப்படுவதால் எனது நற்பெயருக்கு ஏற்படும் களங்கம் எனது ஊரினதும் மாவட்டத்தினதும் பெயருக்கு அபகீர்த்தியை உண்டுபண்ணும் எனவும், எனது கைது அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் அவர்களது அரசியல் வாழ்வைப் பாதிக்கும் விடயமாக இருக்கப் போகிறது எனவும் கூறுகின்றார்!

30 A –
தான் கைது செய்யப்படும் பட்சத்தில் அது அரசியல் ரீதியாக தான் இதுவரை வன்னி மாவட்ட மக்கள் மத்தியில் செய்துவந்த சேவையும் தனது ஒத்துழைப்புடன் சேவையாற்றிய கௌரவ கைத்தொழில் வர்த்தக அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் அவர்களின் சேவைக்கும், எதிர்கால அரசியலுக்கும் தடை ஏற்படுதல், நற்பெயருக்கு களங்கம் ஏற்படுதல் மற்றும் குறிப்பாக எதிர்வரும் காலத்தில் நடைபெறவுள்ள வடக்கு மாகாண சபை தேர்தல் நடவடிக்கைகளுக்கும் தாக்கத்தை ஏற்படுத்தலாம் என்பதாகும். அது போல இவர் அமைச்சர் ரிஷாட் பதியுத்தீன் அவர்களுடைய அமைச்சின் பயிற்சி முகாமையாளர் எனவும் பிணை விண்ணப்பத்தின் 30 ஆம் பந்தியில் உறுதி செய்துள்ளார். விண்ணப்பதாரி கௌரவத்துடன் கூறவருவது என்னவென்றால் தான் ஒரு முஸ்லிம் எனவும், தொழிலாக கௌரவ அமைச்சர் ரிசாட் பத்யுத்தீன் அவர்களின் அமைச்சில் பயிற்சி முகாமையாளர் (தமிழ் மொழி) ஆகக் கடமை ஆற்றுவதாகவும் ஆகும். இவ்வாறு கடத்தலின் பின்னணியில் உள்ள அரசியல் தொடர்பை விண்ணப்பதாரி தனது பிணை விண்ணப்பத்தில் உறுதி செய்துள்ளார்.

இந்த கடத்தல் சம்பவத்தின் சூத்திரதாரிகளை அடையாளம் காணும் வேட்டையில் மும்முரமாக ஈடுபட்டு வந்த பொலிசார் தற்போது அவை அனைத்தையும் இடைநடுவில் நிறுத்தி உள்ளனர். இதற்கான முக்கிய காரணம் சந்தேக நபர் அமைச்சர் ரிசாட் பதியுத்தீன் அவர்களின் அருகாமையில் இருப்பதாகும். சில வாரங்களுக்கு முன்னர் கொள்ளுப்பிட்டி ரன்முத்து ஹோட்டலில் சந்தேக நபரின் சகோதரன் ஏற்பாடு செய்திருந்த வடக்கு முஸ்லிம்கள் வெளியேறி 20 வருட நினைவு தின நிகழ்வில் இச் சந்தேக நபரும் கலந்துகொண்டிருப்பதைக் கண்ட பலர் அது தொடர்பாக பொலிசுக்கும் 119 க்கும் அறிவித்தும் எப் பயனும் கிட்டவில்லை. அந்த நிகழ்வில் அமைச்சர் ரிஷாத் பதியுத்தீன் பிரதம அதிதி என்பது குறிப்பிடத்தக்கது.

பட்டாணி ராசிக்கை கடத்துவதற்கும் கடத்தலை மூடி மறைப்பதற்கும் பல்வேறு காரணிகள் உள்ளன. அதில் பிரதான காரணம் பணமாகும். அமைச்சர் ரிசாட் பதியுத்தீனுடன் தொடர்புடைய புத்தளம் சமூக நம்பிக்கை நிதியம் (CTF) என்னும்  நிறுவனத்தின் பணமாகும். இந் நிறுவனத்தின் நிதியை மேற்கூறிய சந்தேக நபர் உள்ளிட்ட கும்பலொன்று தமது சொந்த வங்கிக் கணக்குகளில் வைப்பிலிட்டு இஷ்டம் போல அனுபவித்து வந்துள்ளனர். இது தொடர்பாக நிதியத்தின் ஸ்தாபகர்களில் ஒருவராகிய கடத்தப்பட்டுள்ள பட்டாணி ராசிக் அடிக்கடி வினாத் தொடுத்துள்ளார். இறுதியாக அவர், பணத்தை முறையாக ஒரு வங்கிக் கணக்கில் வைப்பிலிட்டு வெளிப்படைத்தன்மையுடன் உபயோகிக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார். இதனை சந்தேக நபர் நவ்ஷாத் மிக வன்மையாக
மறுத்துள்ளார். கடத்தலின் சூத்திரதாரிகள்  இந் நிதியத்தை தமது இஷ்டம் போல அனுபவிப்பதற்கு அதனை மன்னாருக்குக் கொண்டு போக முயற்சி செய்துள்ளார். அதற்கு இருந்த ஒரே ஒரு தடை உள்ளூர்க்காரரான பட்டாணி ராசிக் ஆகும்.

விசாரணைகளை நடத்திய பொலிசார் சம்பவத்தில் தொடர்புள்ள எந்தவொரு சந்தேக நபரிடமிருந்தும் இது வரை ஒரு வாக்கு மூலம் கூட பெற்றுக்கொள்ளவில்லை. ராசிக் உடைய குடும்பத்தார் மற்றும் உறவினர்கள் ராசிக் கடத்தல் தொடர்பாக உரிய பொலிஸ்  நிலையங்களுக்கு, மாகாண பிரதி பொலிஸ் மா அதிபருக்கு, பொலிஸ் மா அதிபருக்கு, பிரதேச அரசியல்வாதிகளுக்கு, பாதுகாப்பு செயலாளருக்கு, அதிமேதகு ஜனாதிபதி அவர்களுக்கு, அமைச்சர் பஸில் ராஜபக்ஷ அவர்களுக்கு, மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ அவர்களுக்கும் எழுத்து மூலம் தெரிவித்த போதும் அவற்றினால் இது வரை எந்தப் பயனும் கிட்டவில்லை.

இறுதியாக புத்தளம் பெரிய பள்ளிவாசலின் கவனத்துக்கு  வ்விடயம் கொண்டு செல்லப்பட்டது. தற்போது பள்ளிவாசலின் உதவியுடன் பட்டாணி ராசிக் அவர்களது குடும்பத்தவர்கள்  தமக்கு நீதி கிடைக்காமைக்கு எதிராக வீதியில் இறங்கியுள்ளனர்……………………………………

No comments: