Sunday, October 20, 2013

காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் - பாகிஸ்தான் பிரதமர்

காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும் என்று பாகிஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் தெரிவித்தார்.

பாகிஸ்தான் பிரதமராகப் பதவியேற்ற பிறகு நவாஸ் ஷெரீப் அமெரிக்காவுக்கு முதல் அரசு முறைப்பயணம் மேற்கொண்டுள்ளார்

அவர் புதன்கிழமை வெள்ளை மாளிகையில் அதிபர் ஒபாமாவை சந்தித்துப் பேசுகிறார். அவர் அமெரிக்கா செல்லும் வழியில் லண்டனில் செய்தியாளர்களிடம் கூறியது:



கடந்த 1999ஆம் ஆணடு ஜூலை மாதம் நான் அமெரிக்கா சென்றபோது, காஷ்மீர் விவகாரம் தொடர்பாக முன்னாள் அதிபர் கிளிண்டனிடம் பேசினேன். "நீங்கள் 10 நிமிடம் செலவழித்தால் போதும். காஷ்மீர் விவகாரம் எளிதில் தீர்ந்து விடும்' என்றேன். அதற்கு, இந்த விவகாரத்தில் தலையிடுவதாக அவர் உத்தரவாதம் அளித்திருந்தார்.

மத்திய கிழக்கு மற்றும் காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டும். சர்வதேச சக்திகளும் இதில் தலையிடவேணடும்.

இந்தியா-பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளும் அணுசக்தி மிகுந்த நாடுகளாக உள்ளன. கடந்த 60 ஆண்டுகளாக காஷ்மீர் பிரச்னை நீடித்து வருகிறது. இப்பிரச்னை தற்போது மிகவும் ஆபத்தானதாக மாறியுள்ளது. இந்தியா அணு ஆயுதங்கள் தயாரித்தது; நாங்களும் தயாரித்தோம். இந்தியா ஏவுகணைகள் தயாரித்தது, நாங்களும் தயாரித்தோம். ஆனால் அதற்கும் ஒரு எல்லை உண்டு.

காஷ்மீர் விவகாரத்தில் அமெரிக்கா தலையிட வேண்டும். நான் ஒபாமாவை நேரில் சந்திக்கும்போது இதை மீண்டும் வலியுறுத்துவேன் என்றார் நவாஸ் ஷெரீப்.

இந்தியா நிராகரிப்பு: ஆனால், நவாஸ் ஷெரீபின் கோரிக்கையை இந்தியா நிராகரித்துள்ளது. இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கூறும்போது,

""காஷ்மீர் விவகாரத்தில் மற்ற நாடுகள் தலையிடுவதை இந்தியா ஒருபோதும் ஏற்றுக் கொள்ளாது. இந்தியாவின் ஒரு பகுதியாக காஷ்மீர் திகழ்கிறது. அதைப் பற்றி வேறு யாரும் கேள்வி எழுப்பக்கூடாது. இதுபற்றி பேசி நேரத்தை வீணடிக்க வேண்டாம்'' என்றார்.

அமெரிக்கா கருத்து: நவாஸ் ஷெரீபின் பேட்டி குறித்து அமெரிக்க அரசின் மூத்த அதிகாரி ஒருவர், வாஷிங்டனில் கூறுகையில் ""காஷ்மீர் விவகாரத்தில் எங்கள் கொள்கை சிறிதளவும் மாறவில்லை. அதை இந்தியா-பாகிஸ்தான் இடையிலான இருதரப்புப் பிரச்னையாகவே நாங்கள் கருதுகிறோம்'' என்றார்.

No comments: